Sunday, May 2, 2010

அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு.

அமைச்சுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்த மூன்று மாத காலத்திற்குத் தேவையான நிதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பையே கடந்த நவம்பர் மாதம் நடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அக்கணக்கு வாக்குகெடுப்பின் செலவினங்களுக்கான கால எல்லை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.
வரவுசெலவுத் திட்டமொன்று நிறைவேற்றப் படும் வரை அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை திறைசேரியிலிருந்து ஒதுக்குவதற்கு அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசெம்பர் வரையான ஆறு மாத காலத்திற்காக குறுகிய கால வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் வழமைபோல் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment