Monday, May 23, 2011

சுவாமிக்கு உதயத்தின் கண்ணீர் அஞ்சலி....!



மட்டக்களப்பு மாதாவின் மடியில் வந்துதித்த சுவாமி விபுலாநந்தர் எடுத்த
பணியைத் தொடர்ந்தவர் சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்கள்
இராமகிருஷ்னமிஷன் கிழக்கிலங்கை கல்வி அபிவிருத்திக்கு கிறிஸ்தவமிஷன்
போன்று அளப்பரிய பணியை ஆற்றியிருக்கின்றது. கிழக்கில் சகல இனமக்களும்
மதத்தவரும் எந்த வேறுபாடுமற்றவகையில் ஒரே கூரையின்கீழ் கல்வியைப்பெறும்
வாய்ப்பினை மிஷன் வழங்கியது.
சுவாமி ஜீவானந்தாஜீயைத் தொடர்ந்து இப்பணியைப் பொறுப்பேற்று செவ்வனே
செய்தவர் மறைந்த சுவாமிஜீ அவர்கள். இதன்மூலம் ஆதரவற்ற வறிய
மாணவர்களுக்கு கல்விச்செல்வம் ஊட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில்
கிழக்கில் ஏற்பட்ட சுனாமி வெள்ளம் யுத்தப்பாதிப்புக்களின்போது சுவாமி
அஜராத்மாநந்தா அவர்கள் மக்கள் மத்தியில் நின்று ஆற்றிய மகத்தான
பணிகளை மறக்க முடியாது.
சுவாமியின் மறைவையொட்டி துயரில் ஆழ்ந்திருக்கும் அனைத்து இல்ல
மாணவர்களுக்கும் மிஷன் நிர்வாகத்தினருக்கும் ஒரு சமூக ஆன்மீகத்
தலைமத்துவத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களுக்கும் சுவிஸ் வாழ்
உதயம் உறவுகள் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
சுவாமியின் ஆத்மா சாந்திஅடைய பிராத்திக்கின்றோம்.
உதயம் உறவுகள்
சுவிஸ்

Tuesday, April 19, 2011

இலங்கைக்கான உதவியை இரட்டிப்பாக்க உலகவங்கி முடிவு அமைச்சர் சரத் அமுனுகமவிடம் உலக வங்கிப் பணிப்பாளர் உறுதி…..

இலங்கைக்கு வழங்கி வரும் உதவித் தொகையை அடுத்த வருடம் இரட்டிப்பாக்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஒக்கொன்ஜோ இவெலாவை வொஷிங்டனில் சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், உலக வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார ரீதியில் நாடு முன்னேறிச் செல்வதற்கான திட்டங்களுக்கு உலக வங்கி தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனக் குறிப்பிட்ட ஒக்கொன்ஜோ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தலா வருமானத்தை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டத்துக்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் தெரிவித்துள்ளார். நடுத்தர வருமானங்களைக் கொண்ட நாடுகளின் அபிவிருத்திக்கு உலக வங்கி உதவிவருகிறது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோன்று இலங்கைக்கும் உதவிகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார். இலங்கை பொருளாதார ரீதியில் துரித அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர், புனர்நிர்மாண மற்றும் அபிவிருத்திக்கான வங்கியிலிருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கான தகுதி யைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப் பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டியிருக்கும் உலக வங்கியின் முகா மைத்துவப் பணிப்பாளர் ஒக்கொன்ஜோ இவெலா, அபிவிருத்திகள் மற்றும் திறன் களை இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையே உலக வங்கி எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் கூறி யுள்ளார். சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகமவுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.டி.தீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.என்.வீரசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆந்திர பிரதேச கடற்பரப்பில் 10 இலங்கை மீனவர் கைது..

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்கள் 10 பேரையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள் ளது. இந்து சமுத்திர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் எல்லை மீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாகக் கூறி ஆந்திர பிரதேச கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயணித்த இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இக்கைது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரட்ண, இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தா னிகராலயத்துடன் பேச்சு நடத்தி, மீனவர் களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சி களில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் தினகரனுக்குத் தெரிவித்தார். இந்திய சட்டமுறைகளுக்கு அமைய இம்மீனவர்கள் விடுதலை செய்யப்படு வார்கள் என இந்திய அதிகாரிகள் அமைச்சருக்குப் பதிலளித்திருப்பதாகவும் எனினும், இம்மீனவர்களை கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டிருந்த நிலையில், தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் 10 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போன நான்கு மீன வர்களில் நான்காவது நபரின் சடலம் நாகப்பட்டிணம் பகுதியில் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. நான்கு மீனவர்களில் ஒருவரின் சடலம் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு சடலங்கள் தமிழகத்தின் தொண்டி பிரதேசத்தில் மீட்கப்பட்டதாகவும் அவ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Saturday, April 16, 2011

உலகின் ஆறாவது செல்வாக்குமிக்க தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு டைம் சஞ்சிகையின் வாக்கெடுப்பில் கணிப்பு.......



உலகிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரை உலகின் அதிக பிரபலம் பெற்று விளங்கும் டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்தமைவாளர்கள், மதத்தலைவர்கள், சான்றோர் மற்றும் நீங்கள் விரும்பும் வீரமிக்கவர் போன்றவர்கள் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் முன்னணியில் உள்ள நூறு பேரை தெரிவு செய்யும் பொறுப்பை டைம் சஞ்சிகை உலகெங்கிலும் பரந்திருக்கும் தனது இலட்சக் கணக்கான வாசகர்களிடம் விட்டிருந்தது. வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 88,069 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்திற்கு தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் துணைவியார் மிச்சல் ஒபாமா 16,460 வாக்குகளைப் பெற்று 30 இடத்திற்கும், உலகின் மிகவும் அதிகாரம் படைத்த மனிதன் என்று கூறப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை வகிக்கும் பராக் ஒபாமா 8,669 வாக்குகளைப் பெற்று 46வது இடத்திற்கும் வந்திருக்கிறார். இலங்கை ஜனாதிபதியைப் பற்றி சில சர்வதேச அமைப்புக்களும், அமெரிக் காவை ஆதரிக்கும் சில நிறுவனங்களும் போலிப் பிரச்சாரங்களை செய்து இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எத்தனித்துக் கொண்டிருக்கும் இவ்வேளை யில், சர்வசே புகழ்பெற்ற சஞ்சிகையின் கற்றறிந்த வாசகர்கள் அந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து இலங்கை ஜனாதிபதியின் சாதனைகளை மதிப்பீடு செய்து அவருக்கு இந்தளவு பெருந்தொகை வாக்குகளை வழங்கி ஆறாவது நிலைக்கு உயர்த்தியிருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விடயமாகும்.

Thursday, April 14, 2011

தம்மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது பிரதியமைச்சர் முரளிதரன்……..

தமது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தம் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். போராட்டத்தில் இருந்து ஆயுத வன்முறையினால் எதுவும் சாதிக்கமுடியாது என்பதையுணர்ந்து ஜனநாயக வழிக்கு திரும்பி அதன் மீது நம்பிக்கைகொண்டு அரசியலில் பிரவேசித்து இன்று இந்த நாட்டின் மாபெரும் அரசியல் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பிரதியமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளேன். இவ்வாறான நிலையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை எம்மை கடும் கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் எனது நற்பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை உண்டுபண்ணுபவையாகவும் உள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் எதுவித அசம்பாவிதங்களும் அற்ற நிலையில் மக்கள் மிகவும் ஒரு சந்தோஷமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அங்கு சென்றுவரும் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் விழிப்புடன் செயற்பட்டுவருகின்றேன். கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உத்தரவு விடுத்த நிலையில் இன்று அந்த மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் இன்றி நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். இவ்வாறான நிலையில் எதுவித ஆதாரமும் இன்றி இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரின் பெயருக்கு எதுவித ஆதாரமும் இன்றி களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நிறுத்தவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றேன். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் நாங்கள் எதுவித விமர்சனமும் செய்யாத நிலையில் எமது நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதையும் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிழக்குமகள் இணையத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

பிறக்கும் புதுவருடம் உலக
மக்கள் அணைவரும்
அமைதியும் சந்தோசத்துடனும்
இனிதே இன்புற்றிருக்க இனிய
வாழ்த்துக்கள் கிழக்குமகள்

Wednesday, April 13, 2011

தமிழ்-சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு ஊர்செல்ல கொழும்பில் பயணிகள் திரள் 3500 பஸ்கள் சேவையில்..

தமிழ்-சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு 3500 பயணிகள் பஸ்வண்டிகள் நேற்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இத்திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2500 பஸ்வண்டிகளும், 1000 தனியார் பஸ்வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்த ப்பட்டிருப்பதாகவும் அமைச்சுக் கூறியது. பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு மக்கள் செல்வதற்காக வெளி இடங்களி லிருந்து கூடுதலான பயணிகள் பஸ் வண்டிகள் கொழும்புக்குத் தருவிக்கப் பட்டிருப்பதாக இ.போ.ச. தெரிவித்தது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடங்களில் பெருமளவான மக்கள் நேற்று முண்டியடித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இருப்பினும் மக்கள் எவ்வித கஷ்டமுமின்றி சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. இதுஇவ்வாறிருக்க, பண்டிகை காலத்தையொட்டி இலங்கை புகையிரதத் திணைக்களம் நேற்று முதல் 17 ரயில்களை தூர இடங்களுக்கான மேலதிக சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. அவற்றின் பெட்டிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறுந்தூர ரயில் சேவையில் 70 புகையிரதங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இச்சேவை 14ஆம் திகதிவரை தொடரும் என்றும் ரயில்வே திணைக்களம் கூறியது. இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கொழு ம்பு புறக்கோட்டை ரயில் நிலையம் மற்றும் பிரதான பஸ் தரிப்பிடங்க ளுக்கு நேரில் சென்று பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கும் விசேட போக்குவரத்து ஏற் பாடுகளைக் கண்காணித்து, உரிய பணிப்புரைகளை வழங்கினார்.

Thursday, April 7, 2011

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு! .

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. கிளிநொச்சியில் விவசாய பீடத்துக்கு அருகில் இதனை ஆரம்பிப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மூதவையும் பேரவையும் முடிவு எடுத்துள்ளன. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளரினால் உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்ட செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது. அதற்கான விபர அறிக்கையை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்கு ஓரிரு வாரங்களில் சமர்ப்பிப்பதென முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தொடரும் உதயத்தின் உதவிப்பணி..............

கிழக்கில் ஏற்பட்ட பாரியவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் பணியினை சுவிஸ் உதயம் அமைப்பு ஆரம்பித்துள்ளது. இதன்படி அம்பாறை மாவட்டத்திற்கான உதவிவழங்கும் நிகழ்வு கடந்த 20ம் திகதி கல்முனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 103 மாணவர்களுக்கு தலா 5000 ரூபா வைப்பிலப்பட்ட சேமிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் இருதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாணவர்களில் ஒருவருக்கு 50,000 ரூபா பெறுமதியான இன்புஸா பம் வழங்கப் பட்டதுடன் மற்றைய மூவருக்கும் வைத்தியச்செலவுகளுக்கென தலா 50;000 ரூபா வைப்பிலிடப்பட்ட சேமிப்புப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதயத்தின் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.ஏப்ரல் 4ம் திகதி மட், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மற்றொரு நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 550 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது. அத்தோடு இப்பாடசாலையில் அமைக்கப்படவுள்ள கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கான செலவில் ஒருபகுதியை சுவிஸ் உதயம் அமைப்பு பொறுப்பேற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற பாரிய உதவிவழங்கும் நிகழ்வுகளில் ஒன்று எதிர்வரும் 8ம் திகதி மட் பெரியபோரதீவிலும் மற்றயது ஏப்ரல் நடுப்பகுதியில் திருகோணமலை மூதூர் தொகுதியிலும் இடம்பெறவுள்ளது.

Tuesday, April 5, 2011

மீள்குடியேறியோரின் வாழ்வாதார திட்டத்திற்கு ரூ. 1000 மில். ஒதுக்கீடு.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா பிரதேசங்களில் சுயதொழில் கடன்.



யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் கடன் வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ. சமரசிங்க தெரிவித்தார். வட மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 10,000 குடும்பங்களுக்கே சுய தொழில் முயற்சிகளுக்காக கடன் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர், வட மாகாணத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அரசாங்கம் இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இலகு கடன் வசதிகளை அறிமுகம் செய்வதன் மூலம் தமது வாழ்க்கையை பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும். மக்களுக்கு தேவையான சகல வசதி களையும் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வா தாரம் மட்டுமன்றி சமூக நல்லிணக்கத்தையும், சமாதான மான, நாட்டை கட்டியெழுப்ப முடியும். இதற்காகவே ஜனாதிபதி அவர்கள் மீள் குடி யேறிய மக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபை ஊடாக 4 வீத வருட வட்டியில் 10 வருட தவணைக் காலத்தில் செலுத்தி முடிக்கும் வகையில் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி யுள்ளது. இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஒரு வருடகாலம் சலுகைக் காலமும் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இக்கடன் தொகையானது ஆகக்கூடிய இரண்டரை இலட்சமும் குறைந்த பட்சம் 50,000 ரூபாவாகும். கடன்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் பிரதேசத்தில் காணப்படும் வளங் களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தி, சிறு வியாபாரம் தையல், விவசாயம் போன்ற உற்பத்திகளுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இவ் வேலைத்திட்டமானது 4 வருட கால எல்லையைக் கொண்டது. இக்காலப் பகுதியில் வடமாகாணத்திலுள்ள சகலரும் பொருளாதார நீதியாகவும், சமூக ரீதியாக வும் எழுச்சி பெற முடியும். இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இக்காலப்பகுதி வரை 150 க்கும் மேற்பட்டவர்கள் இச் சலுகையை பெற்றுக் கொண்டதுடன் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது. மிக விரைவில் அவர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Friday, April 1, 2011

புனர்வாழ்வு பெற்ற 206 பேர் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு.

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 206 பேர் இன்று (01,04,11) வவுனியா நகர மண்டபத்தில் நடைபெறும் வைபவத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள். சரண் அடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெறுகின்றதென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, March 30, 2011

கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி தனது சொந்த மண் ணில் விடை பெற்றார் இலங்கை நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன்.

இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார். ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்னரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது. இதன்படி முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்தார். இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

Monday, March 28, 2011

1934 வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.320 பாடசாலை அதிபர்களையும் நீதிமன்றில் நிறுத்த சுகாதார அமைச்சு முடிவு

நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் மிகமோசமான வீட்டுத் சூழலைக் கொண்டிருந்த 1934 வீட்டு உரிமை யாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் நிமித்தம் நேற்று முன்தினம் நாடெங்கிலும் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 824 வீடுகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 35 ஆயிரத்து 638 வீடுகளில் நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் காணப் பட்டதுடன், 3001 வீடுகளில் நுளம்புகளின் குடம்பிகளும் கண்டறியப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார். இதேவேளை, அதிக நுளம்பு பெருக்கத் துடனான சூழலைக் கொண்டிருந்த 320 பாடசாலை அதிபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், சுகாதார அமைச்சு கடந்த புதனன்று முதல் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளியன்று நாடெங்கிலும் 6012 பாடசாலைகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 2538 பாடசாலைகளில் நுளம்பு பெருகக்கூடிய சூழல் காணப்பட்டதுடன், 638 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகளும் கண்டறியப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் 320 பாடசாலைகளில் அதிகளவு நுளம்புகள் காணப்பட்டதுடன், நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களும் நிறையவே இருந்தன. இந்த பாடசாலை களில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் ஏற்கனவே டெங்கு நோய்க்கும் உள் ளாகியுள்ளனர். இருந்தும் இப்பாடசாலை களின் அதிபர்கள் கல்வி அமைச்சினதோ, சுகாதார அமைச்சினதோ அறிவுறுத்தல்களை கருத்தில் எடுக்காது செயற்படுகின்றனர். அதன் விளைவாகவே இப்பாடசாலைகளில் நுளம்புகள் பெருகிக் காணப்படுகின்றன அதன் காரணத்தினால்தான் இப்பாடசாலை களின் அதிபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

Friday, March 25, 2011

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதி அரசர்….


மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதி அரசர் எஸ். சிறிஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நேற்று (24,03,11) ஜனாதிபதி அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Thursday, March 24, 2011

இன்று உலக சயரோக தினம்

இன்று உலக சயரோக (24,03,11) தினமாகும். இத் தினத்தையொட்டி நாடெங்கிலுமுள்ள சகல மாவட்டங்களிலும் சயரோக விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்துள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் ஊர்வலங்களும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கின்றன.
இலங்கையில் சயரோக நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்த மாவட்டமான பொலன்னறுவை யில் தேசிய சயரோக தின நிகழ்ச்சிகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவிருக்கின்றது.
இலங்கையில் வருடத்திற்கு 10 ஆயிரம் பேர் சயரோக நோயாளர்களாக இனம் காணப்படுகின்றனர். கடந்த வருடம் 10 ஆயிரத்து 95 பேர் சயரோக நோயாளர்களாக இனம் காணப்பட்டதுடன் இவர்களில் 2096 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Tuesday, March 22, 2011

சூரியன் பூமிக்கு மிக அருகில் சூரியக் கதிர்கள் நேரடியாகப் படிவதால் உஷ்ணமான காலநிலை.

சூரியன் பூமியை அண்மித்துள்ளதாலும்; சூரியக் கதிர்கள் நேரடியாகப் பூமிக்கு வந்து சேர்கின்றதHலும்; அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருப்பததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா தெரிவிக்கினறார்.
வானில் மேகத் திரள் குறைவடைந்துள்ளதால் சூரியக் கதிர்கள் நேரடியாகப் பூமிக்கு வந்து சேர்கின்றன. மேலும் காற்றின் வேகமும் வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதனும் குறைவடைந்துள்ளது.
நாட்டில் அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருப்பதற்கு வெப்பநிலை அதிகரிப்பு காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
வியர்வை ஆவியாகும் வீதமும் பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன் காரணத்தினால் தான் தற்போதைய அசெளகரிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. மற்றப்படி வெப்பநிலை அதிகரிப்புக்கு தற்போதைய அதிக உஷ்ண காலநிலை காரணமல்ல.
இருப்பினும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றார்.

Monday, March 21, 2011

இலங்கை பக்தர்களுக்கென இந்தியாவில் விசேட ரயில் சேவைகள் இந்திய உயர் ஸ்தானிகர் அறிவிப்பு!

‘புத்தகாயா’ ‘கபிலவஸ்து’ போன்ற இந்தியாவின் முக்கிய மதத் தலங்களுக்கு சென்னையிலிருந்து இலகுவாக பயணிப்ப தற்கான விசேட ரயில் சேவைகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து இந்திய புனித தலங்களுக்குச் செல்வோரின் நன்மை கருதி இத்தீர்மானத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; தலைமன்னார் இராமேஷ்வரம் கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவைகளோடு இணைந்ததாக இந்த சென்னை ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ரயில் சேவை மூலம் இந்தியாவின் 14 புனித தலங்களுக்குச் சென்னையிலிருந்து சுலபமாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கலாசார நட்புறவுப் பேரவை ஏற்பாடு செய்திருந்த சர்வ தேச பெளத்த மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கண்டி பல்லேகல சர்வதேச பெளத்த பல்கலைக்கழக மண்டபத்தி ஆரம்ப மானது.
இரு தினங்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்திய உயர் ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.

Wednesday, March 16, 2011

2011இல் 60,000 வீடுகள்.

இவ் வருடம் நாடுபூராகவும் 60,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அமுல்படுத்தியுள்ளது.
வீடு கட்டுவதற்கு எதிர்பார்த்தவண்ணம் உள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு “ஜன சேவா மில்லியன் வீடமைப்பு மற்றும் குடியேற்ற திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன. அரசாங்கம் இதற்கென 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
மேலும் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியன 4500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், 20,000 குடும்பங்களுக்கு இக் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன

Monday, March 14, 2011

தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு பாதுகாப்புக் கடமையில் 50,000 பொலிஸார்,25,000 படையினர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (14) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிரசாரக் கூட்டம், மக்கள் சந்திப்பு, உள்ளிட்ட அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடித்துக் கொள்ளப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். அதேவேளை நாளை (15) நள்ளிரவுக்கு முன்னர் வேட்பாளர்களின் காரியாலயங்களும், வீடுகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் அலங்காரங்களும் நீக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் பொலிஸ் மாஅதிபர் மற்றும் கட்சி செயலாளர்களின் கலந்துரையாடலின் போது இது தொடர்பான இணக்கம் காணப்பட்டதாகவும் எனவே அவ்வாறான அலங்காரங்களை அப்புறப்படுத்தாத காரியாலயங்களில் உள்ள அலங்காரங்களை பொலிஸார் அப்புறப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் இடம் பெறும், எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் குழப்பங்கள் அல்லது கலவரங்கள் ஏற்படும் பிரதேசத்தில் பொலிஸாருக்கு புறம்பாக இராணுவத்தினரும் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்காக வரவழைக்கப்படுவ ரென்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த வேளையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது இறுதிக்கட்ட கூட்டங்களை நடத்திவருகின் றன.
அரச தரப்பு கட்சியினர் இதுவரை மேற்கொண்ட வேலைத்திட்டங்களையும் இனியும் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கூறி வருகின்றனர்.
அதேநேரத்தில், எதிரணியினர் தாம் கிராம சபைகளை கைப்பற்றுவதன் மூலம் செய்யக்கூடிய பணிகளை தெரிவித்து மக்களிடம் வாக்குக் கேட்டுவருகின்றனர்
இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுங்கேணி பிரதேச சபைக்குரிய இறுதி பிரசாரக் கூட்டம் கடந்த வெள்ளிமாலையும், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபைக்குரிய கூட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவும் நடைபெற்றன.ஐந்து தமிழ் கட்சிகளுடைய தலைவர்க ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீ. ஆனந்தசங்கரி, ரி. சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடைபெற்ற எந்த தரப்பு கூட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவில்லை. குறைந்தளவானவர்களே பங்குகொண்டனர்.
இதேவேளை பாதுகாப்புக்காக 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணியொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பொலிஸார், 20 ஆயிரம் முப்படையினர் மற்றும் 5 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் என 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணி 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அத்துடன் தேர்தல் தினமான எதிர்வரும் 17ஆம் திகதி கலகமடக்கும் படை, நடமாடும் காவல் சேவை, வீதி பாதுகாப்பு சேவை ஆகிய பல சேவைகள் இடம்பெறுவதுடன், தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்கென தனியான பிரிவும் சேவையில் ஈடுபடும்.
வாக்கு பெட்டிகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல தனியான பாதுகாப்பு செயற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இதுவரை தேர்தல் சட்டங்களை மீறியதாக 142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 14 பேர் வேட்பாளர்கள் என்றும் தேர்தல் பாதுகாப்புக்கான விசேட பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

Friday, March 11, 2011

ஜப்பானில் பாரிய சுனாமி: ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸிலும் எச்சரிக்கை

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தினை தொடர்ந்து அப்பகுதியை பாரிய சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு ஒனாமா நகரில் வாகனங்கள், வீடுகள் மட்டும் கட்டிடங்கள் சுனாமியால் அடித்துச் செல்லப்படும் காட்சியினை அந்நாட்டு தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பாக்கியுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
இதேவேளை ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள 19 மாகாணங்களிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Thursday, March 10, 2011

அரச பொறுப்பில் ஹில்டன் ஹோட்டல் அமைச்சர் பசில் தகவல்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலை அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்திலே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.தே.க. எம்.பி. ஹர்ச த சில்வா தெரிவித்த குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் பல நட்சத்திர ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வெளிநாட்டு கம்பனிகளுக்கு சொந்தமானவையல்ல ஹில்டன் ஹோட்டலின் முழு உரிமையும் தற்பொழுது அரசாங்கத்துக்கு பெறப்பட்டுள்ளது. ஐ.தே.க.வே அதனை நாசம் செய்தது. ஹில்டன் ஹோட்டல் கடந்தவாரம் அரசிற்கு முழுமையாக பொறுப்பேற்கப்பட்டது.
காணியின் முழுத் தொகையையும் பெற்றே முதலீட்டாளர்களுக்கு காணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பெறுமதியை விட குறைவாக வழங்கியே ஐ.தே.க. ஆட்சியில் முதலீடுகளை பெற்றது. காணியின் பெறுமதிக்கே எமது அரசு வழங்கி வருகிறது.
சமாதானத்தை நிலைநாட்டி முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் முதலீட்டாளர்களின் பின்னால் செல்ல நேரிட்டது.
இன்று முதலீட்டாளர்கள் தேடி வருகின்றனர். 24 மணி நேரமும் மின்சாரம் நீர் வசதி முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Wednesday, March 9, 2011

இலங்கை - கனடா நேரடி விமான சேவை வரலாற்றில் முதல் முறையாக ஏற்பாடு.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் அண் மையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த வாய்ப்பு இலங்கை க்குக் கிடைத்துள்ளது.
இதன்கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு வாரத்தில் 7 பயணங்களை கனடாவின் டொரொன்டோ விமான நிலையத்திற்கு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்த இணக்கப் பாட்டின் கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு கொழும்பி லிருந்து லண்டன் ஊடாக கனடாவின் டொரொன் டோ வரையில் பயணிகளைக் கொண்டு செல்வதற்கும் கொண்டுவருவத ற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கும் பாரிய நன்மைகள் ஏற்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
அவ்வாறே புதிய ஒப்பந்தத்தின் பயனாக இதுவரையில் இலங்கைக்கும் லண்டனுக்கும் இடையில் நிலவிவந்த வாரத்தில் 13 பயணங்கள் எதிர்வரும் பனிக் காலம் முதல் வாராந்தம் 21 பயணங்களாக அதிகரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் மேலும் கூறினார்

Sunday, March 6, 2011

லிபியாவிலிருந்து இதுவரை 600 இலங்கையர் நாடு திரும்பினர் தகவல்களைப் பெற விமான நிலையத்தில் 24 மணி நேர கருமபீடம்.

லிபியாவிலிருந்து இதுவரை 600 இலங்கையர்கள் நாடு திரும்பியிருப்பதாக இலங்கை வேலைவாயப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
விசேட விமானங்கள் மூலம் இவர்கள் பகுதி பகுதியாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நான்கு கட்டங்களாக 242 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் 150 பேர் நேற்றைய தினம் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்.
லிபியாவிலுள்ள 1500 இலங்கையர்களை யும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவர விசேட விமானங்களை அனுப்புமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இத்தகைய விசேட விமானங்கள் சில ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பதுடன், இன்றைய தினமும் விமானமொன்று லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளதென கிங்ஸ்லி ரணவக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
லிபியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் குறித்த தகவல்களை வழங்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப்பிரிவில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட கருமபீடமொன்று 24 மணித்தியாலங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், லிபியாவில் உயிரிழந்த இலங்கையர் கலவரத்தின் காரணமாக இறக்கவில்லையென்றும், வேலைத்தளத்தில் ஏற்பட்ட விபத்தினாலேயே அவர் உயிரிழந்திருப்பதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

Saturday, March 5, 2011

45 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.

இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 45 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்ப உள்ளதாக மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் லால் த சில்வா கூறினார். இவர்களுடன் 8 படகுகளும் இந்திய பாதுகாப்புப் படையினரால் மீள வழங்கப்பட்டுள்ளன. இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரின் வழித்துணையுடன் வரும் இலங்கை மீனவர்களை காங்கேசன்துறை கடலில் வைத்து படையினர் பொறுப்பேற்க உள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று நாடு திரும்ப ஏற்பாடாகியிருந்த போதும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டதாக கடற்படை கூறியது. இந்தியாவில் மேலும் 19 மீனவர்கள் 7 படகுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் 13 பேர் 6 படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள் ளதாக லால் த சில்வா கூறினார். இவர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர்.

Thursday, March 3, 2011

விவசாய உற்பத்தியில் யாழ். மக்கள் நாட்டுக்கு முன்னுதாரணம்..

விவசாய உற்பத்திகளில் நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கு யாழ்ப் பாண மக்கள் முன்னு தாரணமாகத் திகழ்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புகழாரம் சூடினார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘திவி நெகும’ குடும்ப பொருளாதார அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு யாழ். விவசாயிகளைப் பாராட்டினார்.
30 வருடங்களாக விவசாயம் செய்ய முடியாதிருந்த நிலங்களில் தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் அம்மக்கள் அதனைச் சரியாக பயன்படுத் திக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், நாட்டின் ஏனைய பகுதி மக்களும் இதுபோன்று உற்பத்தித்துறை யில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தாம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர்;
புதிதாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலங்களைப் பார்வையிடுவதற்காக பலாலியில் இருந்து வீதிவழியாக பயணித்ததாகத் தெரிவித்தார்.
இதன்போது அங்கு ஆயிரக்கணக்கான கிலோ பீற்றூட் மரக்கறி வகைகளுடன் புகையிலை அறுவடையும் நேரில் காணக்கிடைத்ததாகவும், அதனைக் கண்டு தாம் மகிழ்வுற்றதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, March 1, 2011

புனர்வாழ்வு பெற்ற மேலும் 300 முன்னாள் புலி உறுப்பினர்களில் சமூகத்துடன் இணைப்பு.

இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதான முன்னாள் புலி உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தால் புனர்வாழ்வு முகாங்களில் புனர்வாழ் அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படும் நிகழ்வு, கட்டம்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வவுனியா புனர்வாழ்வு முகாங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழிற்பயிற்சி மற்றும் மனவள பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 300 பேர் இன்று(01.03.11) சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
இந் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் வட மாகாண ஆளுநர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மற்றும் வவுனியா அரச அதிபர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதுவரை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 6000பேர் வரை புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, February 28, 2011

இராமேஸ்வரம் -மன்னார் கப்பல் சேவை விரைவில் தூத்துக்குடி- கொழும்பு சேவை இன்று ஆரம்பம்.

கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது.
500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல்- சுங்க பரிசோதனைகள்- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும்.
பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்
இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, February 26, 2011

வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பாராட்டு.

மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார்.
வடபகுதியில் பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளிட்ட உட்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது இலங்கை விஜயத்தின்போது இலங்கை சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வடபகுதி அரசாங்க அதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந் ததாகவும் அவர் தெரிவித்தார். வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலத் திட்டங்களை உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தாம் வரவேற்பதாகவும், இப்பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்று எட்டப்படவேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் மேலும் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.

Friday, February 25, 2011

மீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வு.

கடற்றொழில் தொடர்பான பிரச்சினைக்கு இரு நாடுகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கூட்டுக்குழுவொன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,மீனவர் தொடர்பான பிரச்சினையின் போது இரு நாட்டுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் கெளரவமாகவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பூரண விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான முழு அதிகாரம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற கடல் எல்லை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எமது கடற்படை படகுகள் எதுவும் செல்லவில்லை.
இந்திய மீன்பிடிப்படகுகளை சந்திக்க நேரிட்டால் எமது கடற்படையினர் மனிதாபிமானமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.
யுத்தம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக வடக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. வடபகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித் துள்ளனர்.
மீன்பிடி பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனிதாபிமான ரீதியில் இதற்கு தீர்வு காண முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு தற்காலிக தீர்வு காண்பது நல்லதல்ல. பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சு நடத்தியுள்ளன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய தெளிவான அரச இயந்திரம் உள்ளது. இதனூடாக இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உள்ளோம்.

Thursday, February 24, 2011

ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் புலிகள் உள்ளடக்கம்.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி ட்டுள்ளது.

Wednesday, February 23, 2011

இரட்டைப் பிரஜாவுரிமை இடைநிறுத்தம் ஜனாதிபதி விளக்கம்.

இரு நாடுகளைப் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையிலான இரட்டைப் பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்திரிகை ஆசிரியர்கள் வானொலி தொலைக்காட்சி பொறுப்பதிகாரிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சலுகையைப் பயன்படுத்தி சிலர் இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தே கம் எழுந்திருப்பத னால் இவ்வாறான பிரஜாவுரிமை கோரி விண்ணப்பி ப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்க ளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.
இது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

Monday, February 21, 2011

60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைப்பு தேர்தல் ஆணையாளர்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படிருப்பதால் அறுபது (60) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இதற்கேற்ப எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி 241 உள்ளூராட்சி மன்றங்களு க்குத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக் கைகளை இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் மாவட்ட மட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுககு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பிரதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.
இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று தீர்ப்பு வெளியான பின்னரே தேர்தலை நடாத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ் உள்ளூராட்சி மன்றங்களில் தபால் மூல வாக்களிப்பு க்கான வாக்களிப்பு பத்திரங்களை வழங்குவது, வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட தேர்தலோடு தொடர்புடைய சகல நடவடிக்கைகளும் இடைநிறுத்த ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் 336 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் 301 உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர் தலை நடா த்துவதற்கு ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் தீர்மானித்தருந்தார். இருப்பினும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் 60 உள்ளூராட்சி மக்கறங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் 35 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் பின்னர் நடாத்துவதற்கும் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக் காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவித்து ள்ளது.
எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை அவற்றை விநியோகிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகம் முடிவடையும் திகதி வரை அவற்றை பத்திரமாக வைத்திருப்பதற்கு தபால் நிலையங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, February 20, 2011

பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.
இவர் பல மாதங்களாக யாழ். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
கடந்த சில வாரங்களாக இவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.

Friday, February 18, 2011

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்வலி வடக்கில் பிரதேச செயலகம் அறிவிப்பு.

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற முன்வராதவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு மீள்குடியமர முன்வராத குடும்பங்கள் சாதாரண குடும்பங்களாகவே கணிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் குடும்பங்களை வலி வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இடங்களில் படிப்படியாகக் குடியமர்த்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
எனினும் மீள் குடியமர அனுமதிக்கப்பட்ட இடங்களில் குடியமர விருப்பமில்லாத சிலர், வாழ்ந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் அவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை மட்டும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்தபடியே நிவாரணப் பொருட்களை மட்டும் தவறாது பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செயற்படுகிறார்கள். ஏற்கனவே வலி வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். நிலக்கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் படிப்படியாக மக்களை மீளக் குடியமர அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் அப்பகுதிக்கு சென்று தமது வீடுகளை, காணிகளை துப்புரவு செய்வதற்கோ குடியமர்வதற்கோ ஆர்வம் காட்டாமல் தாம் வாழும் பகுதிகளில் இருந்துகொண்டே நிவாரணப் பொருட்களை மட்டும் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே பிரதேச செயலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோதும்,
அரசாங்கம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவ தற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில் மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டவேண்டும். இதனாலேயே இவ்வாறான நிர்வாக ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Thursday, February 17, 2011

சிறுபிள்ளைகளை காண்பித்து பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை.

சிறு பிள்ளைகளைக் காண்பித்து அதன் மூலம் பொதுக்களின் அனுதாபத்தைப் பெற்று பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதன் தலைவி திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
பிள்ளைகள் தங்கள் சிறுபராயத்தை சுதந்திரமாக கழிப்பதற்கான பிறப்புரிமையைப் பெற்றுள்ளார்கள். அந்த உரிமையை அப்பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்க்கு கூட பறித்து விட முடி யாது என்று சிறுவர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத் துகின்றது.
வீதியில் கைக்குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கும் பெண்களை அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருக்கும் சிறுவர் பராமரிப்பு மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்ற உத்தரவின் பெயரில் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைத்து பிள்ளைகளை சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து அவர்களை நல்ல முறையில் பராமரிப்பார்கள்.
இரண்டு வார காலத்தில் அப்பெண் போதைவஸ்து உபயோகித்தல், அவற்றை விற்பனை செய்தல், சிறு திருட்டுகள், விலைமாதர் தொழில் புரிகின்றமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் இப்படியான தொழிலில் ஈடுபடலாகாது என்று எச்சரித்து பிள்ளைகளையும் தாயமாரிடம் மீண்டும் ஒப்படைத்து விடும்.
அதேவேளையில், மேலே குறிப்பிட்ட குற்றச்செயல்களில் இப்பெண்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தண்டிக்கும், தாய் சிறையில் இருக்கும் காலத்தில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மிகவும் கவனமாக வளர்ப்பார்கள் என்று திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

Wednesday, February 16, 2011

நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நட திட்டம்.

இந்த வருடத்தில் நாடு பூராவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகளை நட உள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நேற்று கூறினார்.
திவிநெகும’ திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 13 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நடப்படவுள்ளதோடு ஒக்டோபர் மாதத்தில் 27 இலட்சம் தென்னை மரக்கன்றுகளும் நட உள்ளதாகவும் அவர் கூறினார்.
‘திவி நெகும’ தேசிய திட்டம் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், 10 இலட்சம் வீட்டு பொருளாதார அபிவிருத்தி அலகுகளை முன்னெடுக்கும் திட்டத்தினூடாக தெங்கு பயிர்ச்செய்கையையும் ஊக்குவிக்க உள்ளோம். ஒவ்வொரு வருடமும் 20 இலட்சம் தென்னை மரங்களை நட வேண்டும் என்ற திட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் குறிப்பிட்டளவு தென்னை மரங்களை நட திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் தெங்கு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
2 வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் தெங்கு பயிரிடப்படவில்லை. ஆனால் வடக்கில் பளை, அச்சுவேலி போன்ற இடங்களில் தெங்கு நாற்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு குச்சவெளி, பாசிக்குடா போன்ற இடங் களிலும் தெங்கு நாற்றுமேடைகள் அமை க்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் தெங்கு உற்பத்தியை மேம்படுத்த உள்ளோம்.
தென்னை தட்டுப்பாடு காரணமாக கேரளாவில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது. ஆனால் ஒரு தேங்காய் கூட நாம் இறக்குமதி செய்யவில்லை என்றார்.
அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன கூறியதாவது: வீட்டுத் தோட்டங்களிலோ காணிகளிலோ மரம் நடக்கூடிய சகல இடங்களில் மரம் நட திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடத்தில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கடந்த வருடம் 2700 மில்லியன் தேங்காய் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2317 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டன. 400 மில்லியன் குறைவாகவே தேங்காய் பெறப்பட்டது. இந்தத் திட்டத்தினூடாக தெங்குப் பயிர்ச் செய்கைக்கு பாரிய உந்து சக்தி வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 15, 2011

தாயகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவோரை இலங்கையர் என அழைக்க முடியாது.

நாட்டில் அமைதி நிலவும் போது தாயகத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் சர்வதேச நாடுகளில் பிரசாரம் செய்வோரை இலங்கையர் எனக் கூட கூறமுடியாது.
அத்தகையோர் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவர்கள் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிபினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முப்பது வருடகால யுத்தம் நீங்கி நாட்டில் அமைதிச் சூழல் நிலவுவதுடன் அபிவிருத்தியில் நாடு கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
இது தொடர்பில் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே இராதாகி ருஷ்ணன் எம். பி. இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
நாடு என்று வரும்போது அங்கு ஆளும்கட்சி என்றோ, எதிர்க்கட்சி என்றோ அல்லது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றோ பார்க்க முடியாது. ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் போது அது பொதுவானதாக எடுத்துக்கொள்ளப்பட்டு இலங்கையர் என்ற ரீதியில் செயற்படுவது முக்கியமாகும்.
அதனை விட்டு விட்டு நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எதிர்க் கட்சித்தலைவரோ அல்லது வேறு எவராக இருந்தாலும் அவர்களை இலங்கையர் என்று கூட சொல்ல முடியாது. எமது அயல் நாடான இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன. பல இன, மத, மொழி பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
பல்வேறு பிரச்சினைகள் அங்கு உள்ள போதும் நாடு என்று வரும்போது பொது உணர்வுடன் இந்தியர் என்று அவர்கள் செயற்படுவது சிறந்த முன்னுதாரணமாகும்.
அதே போன்று உள்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். வெளிநாடுகளில் நமது நாட்டைக் காட்டிக்கொடுப்பதோ நாட் டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுவதோ வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

Saturday, February 12, 2011

பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று இந்திய, பாக். சபாநாயகர்கள் கொழும்பு வருகை.

பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள், பாராளுமன்ற செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இன்று முதல் 15 ஆம் திகதி வரை ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் நேற்று இலங்கையை வந்தடைந்ததாக பாராளுமன்ற உயரதிகாரி ஒருவர் கூறினார்.
மாநாட்டையொட்டி நேற்று பாராளுமன்ற செயலாளர்களின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது
இன்று ஆரம்பமாகும் மாநாடு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்களாதேஷ் சபாநாயகர் அப்துல் ஹமீத், இந்திய லோக் சபா சபாநாயகர் மீராகுமார், மாலைதீவு சபாநாயகர், பாகிஸ்தான் செனட் சபை பிரதி தலைவர் மற்றும் அந்நாட்டு பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்களும், தாயும் சேயும் என்பன தொடர்பில் இங்கு முக்கியமாக ஆராயப்பட உள்ளதாக பாராளுமன்ற உயரதிகாரி கூறினார்.
இலங்கை வருகை தந்துள்ள பொதுநல வாய ஆசிய பாராளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி சீகிரிய பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர் இறுதி நாளான 15 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை, பேராதனை பூங்கா, பின்னவல யானைகள் சரணாலயம் என்பவற்றுக்கும் செல்ல உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொதுநல வாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர் களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த இந்திய சபாநாயகர் ஸ்ரீமதி மீராகுமார், பாக். சபாநாயகர் ஜனாபா பெரோஷ்கான் பாக். செனட் சபையின் தலைவர் மிர், முகம்மத் ஜமால்கான் ஆகி யோரை விமான நிலையத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று வரவேற்றார்.
சபாநாயகருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும் இவர்களை வர வேற்பதற்காக சென்றிருந்தார்.

Friday, February 11, 2011

கிழக்கு மற்றும் வடக்கில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் பேணிப் பாதுகாப்பு.

கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக கைவிடப்பட்டிருந்த வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களைப் பேணிப் பாதுகாக்க தேசிய பாரம்பரிய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேசிய பாரம்பரிய அமைச்சின் கீழ் இயங்கும் தொல்பொருளாய்வு திணைக்களத்தால் இப் பகுதிகளில் பல இடங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பண்டையகாலத்தில் இலங்கை, சீனாவுக்கும் உரோமுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பைபேண மையங்களாக திகழ்ந்த கோகன்ன மற்றும் மாந்தொட்ட கோட்டைகள், திரியாயப் மற்றும் குச்சவெளி பகுதிகள், கோணஸ்வரம் கோவில், கதுருகொட ஆலயம் மற்றும் அதன் நடைபாதை போன்ற வரலாற்று முக்கியதுவம் பெற்ற இடங்களை பேணிப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு தேசிய பாரம்பரிய அமைப்பைச் சேர்ந்த டாக். ஜகத் பாலசூரிய, இலங்கைக்கான நெதர்லாந்து உயர் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர். திரு.ஜகோப் பீரென்டென்ஸ் மற்றும் தொல்பொருளாய்வு திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் டாக்.செனரத் திசானாயக ஆகியோர் இப்பிரதேசங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டனர்.
இப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கி வரும் யாழ் தமிழ் சமூகத்திற்கு அமைச்சர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

Thursday, February 10, 2011

தமிழ் பேசும் பொலிஸார் 2500 பேர் விரைவில் நியமனம்.

பொலிஸ் சேவையில் மேலும் 2500 தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
ஏற்கனவே கொன்ஸ்டபிள் தரத்தில் 500 பேரை இணைத்துக் கொண்டுள்ளதுடன், புதிதாக உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கொன்ஸ்டபிள்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவால் மும்மொழிகளிலும் வெளியி டப்பட்டுள்ள பொலிஸாருக் கான உரையாடல்கள் அடங் கிய கைநூலை பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பு தொழில்வாண்மை யாளர்களின் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சின் செயலாளர் திருமதி மல்காந்தி விக்கிரமசிங்க, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் என். செல்வகுமாரன், முன்னாள் தலைவர் ராஜா கொல்லுரே, கனேடிய உயர் ஸ்தானிகர் புறூஸ் லெவி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கனேடிய அரசின்- சீடா நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸாருக்கான உரையாடல் நூல் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பொலிஸ் திணைக் களத்திற்கென 65 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவற்றை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான வைபவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்வதாகவும் இங்கு அறிவித்த பொலிஸ் மா அதிபர், பொலிஸாருக்கு ஆங்கில மொழி பயிற்சி நெறியொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவுள்ள தாகவும் குறிப்பிட்டார்.

Tuesday, February 8, 2011

பெய்து வரும் அடைமழையினால் குளங்கள் வழிகின்றன....

நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 39 குளங்கள் நிரம்பி வழி வதாகவும், 20 குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டி ருப்பதாகவும் நீர்ப்பாசனத திணைக்களத்தின் நீர் வள முகாமைத்துவப் பிரதிப் பணிப் பாளர் ஜனாகி மீகஸ்தென்ன கூறினார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் கனத்த மழை பொழியத் தொடங்கியுள்ள தால் கெளடுல்ல நீர்த்தேக்கத்தின் 11 வான் கதவுகள் நான்கு அடிகள் உயரப் படியும், மின்னேரியா குளத்தின் 8 வான் கதவுகள் ஐந்து அடிகள் உயரப்படியும் திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோண மலை, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, புத்தளம், குருநாகல், வவுனியா, மன்னார், கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த கனத்த மழை காரணமாக நெற் செய்கை, மரக்கறி மற்றும் பழச் செய்கை, கால்நடைகள் உட்பட வீதிகள் அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2273 வரை உயர்ந்திருப்பதாகவும் 13 ஆயிரத்து 148 வரையான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.
இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக 85 ஆயிரத்து 387 குடும்பங் களைச் சேர்ந்த 3 இலட்சத்து 11 ஆயிரத்து 287 பேர் 744 முகாம்களில் நேற்றும் தங்கி இருந்ததாகவும் அவர் குறிப் பிட்டார்.
இவ்வெள்ளம், மண்சரிவு காரண மாக 3 இலட்சத்து 26 ஆயிரத்து 230 குடும்பத்தைச் சேர்ந்த 12 லட்சத்து 23 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக அம்பாறை, மாவட்டத்தில் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் நேற்று முன்தினம் வீடுகளுக்குத் திரும்பியுள்ளன என்றும் அவர் கூறினார்.

Monday, February 7, 2011

பெய்துவரும் மழையினால் 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 முகாம்களில் தங்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6558 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6247 குடும்பங் களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6513 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை, திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களும், நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடமத்திய கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.
இம் மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்வும் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முப்படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Sunday, February 6, 2011

மக்களே உதவ முன் வாருங்கள்.....

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உள்ள மக்களுக்கு உதவ முன் வாருங்கள் கிழக்குமகள்..

கிழக்கில் உதயம் சுவிஸ்.........

சுவிஸ் தலைநகர் பேர்ணில் அண்மையில் கூடிய உதயம் நிர்வாகசபை கிழக்கிலங்கையில் வெள்ளத்தின் பின்னரான நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. கிழக்குமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் ஏககாலத்தில் இந்தப்பணி மேறn; காள்ளப்படும். இந்த நிவாரணப்பணிகளுக்கென 1.5மில்லியன் ரூபாய்களை உதயம நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியானது கல்வி நிவாரணப்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். கிராமமக்கள், மற்றும் உள்ளுர் அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் ஒருவார காலத்திற்கு கிழக்கிலங்கை முழுவதும் மேற்கொள்ள்படவுள்ள இந்நிவாரண நடவடிக்கையின்போது மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அவற்றின் உடைமைகள் என்பனவற்றைச் சீர்செய்யும் பணியும் இடம்பெறும். இந்த ஒருவார காலத்தில் குறைந்தது 5மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணியைச்செய்ய முடியுமென உதயம் சுவிஸ் நம்புகின்றது. உதயம் கிழக்கின் ஏற்பாட்டில், உதயம் சுவிஸின் அனுசரணையில் மேற்கொள்ளப்படும் இந்தப்பாரிய பணியைக் கண்காணிக்கவும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தவும் உதயம் சுவிஸ் உறுப்பினர்களைக்கொண்ட குழுஒன்று கிழக்கிற்குச் செல்கின்றது. இந்த ஒருங்கிணைப்பு நெறிப்படுத்தல் பணிகள் உதயம் சுவிஸ் நிர்வாகம் சார்பில் அதன் நிதியாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் தலைமையில்இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயம் நிர்வாகம்

Postal: Uthayam, Postfach 4261, 6002 Lucerne, Switzerland
Tel: 0041 41 240 21 57 --- Fax: 0041 41 311 02 15 --- E-Mail: uthayam@bluemail.ch

Saturday, February 5, 2011

500 மீற்றர் நீளம் 100 மீற்றர் அகலம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய மண்சரிவு.

* வலப்பனையில் மக்கள் வெளியேற்றம்

* கால்நடைகள் உயிரிழப்பு மர்லின் மரிக்கார்

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பலப்பத்தன, தியனில்ல என்ற இடத்தில் சுமார் இருபது ஏக்கர் நிலப்பரப்பில், மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் மற்றும் சேவை பிரிவு தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்று தெரி வித்தார்.

500 மீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும் கொண்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் மூடுண்டுள்ளதுடன், சுமார் ஐம்பது குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு ராகல சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் கூறினார். அதேநேரம், அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குக் கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை நிலவுவதால் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், பிரதேசவாசிகள் விழிப்பாக இருப்பதும் அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறுகையில்,

தியனில்ல மண்சரிவில் சிக்குண்டு ஏழு மாடுகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதி யில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேநேரம், வலப்பனை மகாவெல என்ற இடத்திலும், வெவன்தோட்டத்திலுள்ள கரண்டியெல்ல என்ற இடத்திலும், கும்பல்கமுவவிலும் மண் சரிவு ஏற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கும்பல்கமுவ பகுதியில் வசித்து வந்த 19 குடும்பங்களும் மகாவெல பகுதியிலிருந்து 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டி மாவட்ட அலுவலகப் பூகற்பவியலாளர் விஜேவிக்கிரம கூறினார்.

இதன் காரணத்தினால் மண் சரிவு தொடர்பான தகவல்களை 081-2575063 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறியத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Friday, February 4, 2011

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால்......

வடக்கின் கல்வி அபிவிருத்திக்க 310 மில்லியன் வட மாகாணசபை ஒதுக்கீடு.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வடமாகாணசபை இவ்வாண்டு 310 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
மாகாண கல்வி அமைச்சுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் பி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிதியின் மூலம் 335 பாடசாலைகளுக்கு 2500 கணினிகளும் 10 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆயிரம் ஆசிரியர்களுக்குமுரிய தளபாடங்கள் கொள்முதல் செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது

Thursday, February 3, 2011

சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு மக்கள் பீதி.

இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அணை உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதன் ஐந்து வான் கதவுகள் நேற்றுக் காலை (02.02.11) திறந்துவிடப்பட்டன.
இங்கினியாகல பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள் ளது. இதனால், அணை உடைப்பெடுத்துப் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வான் கதவுகள் அரையடி உயரத்திற்குத் திறக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து, அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு அறிவுறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வான்கதவுகள் திறக்கப்படுவதால் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இங்கினியாகல, தமண ஆகிய பிரதேசங் களின் தாழ்ந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டது.
வான்கதவுகள் திறக்கப்படும் செய்தி காட்டுத்தீ போல் பரவியதனால் நேற்று அம்பாறை மாவட்டத்தில் பதற்றமும், பீதியும் நிலவியது. பல பொலிஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இச் செய்தியால் பாடசா லைகள், அலுவலகங்கள் யாவும் காலை 9.30 மணியுடன் இழுத்து மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடம் தேடிச் சென்றனர். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் காலையில் 104 அடியாகக் காணப்பட்டது. அதனால் வான்கதவு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மாவடிப்பள்ளி கிட்டங்கி தாம்போதிகளில் மீண்டும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. மண்டூர் வெல்லாவெளி வீதியில் 3 தாம்போதிகளுக்கு மேல் 4 அடிவெள்ளம் பாய்கிறது. நவகிரி நீர்ப்பாசனக்குளம் திறந்துவிடப்பட்டதே காரணமாகும். அதனால் அப்பகுதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளநிலைமை படுமோசமாக மாறுகிறது. அடைமழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

பல வயல் நிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீண்டும் வெள்ளம்.

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்து காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிறான் மற்றும் வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி ஆகிய பகுதிகள் உட்பட ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீண்டும் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1346.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதியன்று 331.2 மில்லி மீற்றர் ஒருநாளுக்கான அதிக மழை வீழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 850 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
275 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 42295 குடும்பங்களைச் சேர்ந்த 165491 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.
அதேவேளை மக்கள் இடம்பெயர்வின் போது ஏற்பட்ட அவசர செலவுகளுக்காக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பாரிய வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 40 ஆயரம் ஏக்கர் வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் மழையினால் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம், திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் அடங்கலான அனைத்து பிரதேசங்களிலும் மமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
அத்துடன் பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பன நேரகாலத்துடன் மூடப்பட்டன.

மீண்டும் கனத்த மழை காரணமாக மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலிய அலுவலகப் பொறுப்பாளரான பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க குறிப்பிடுகையில், வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாவெவ மண்சரிவு செயற்படத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கீர்த்தி பண்டாரபுர மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஆறு குடும்பங்களும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதேநேரம் வெலிமடை, நுவரெலியா நெடுஞ்சாலையிலும், புஸ்ஸல்லாவ, நுவரெலியா நெடுஞ்சாலையிலும் நேற்றுக் காலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான போக்குவரத்து உடனடியாக ஸ்தம்பிதமடைந்தது. மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும், பொலிஸாருடன் இணைந்து உடனடியாக ஈடுபட்டனர்.
இதேவேளை பதுளை - கண்டி வீதியில் ரந்தெனிகலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு அருகில் ரஜ மாவத்தையில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நீர்த்தேக்க முகாமையாளர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் துரிதமாக செயற்பட்டு நீர் மட்டத்தைக் குறைத்துள்ளனர்.
இதேநேரம், இப்பாதை ஊடாக மண் ஏற்றும் லொறிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லுவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.