Saturday, February 27, 2010

25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில் கட்சிகளின் 46 மனுக்களும் 35 சுயேச்சைகளும் நிராகரிப்பு..............

பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூ டாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற் றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும். இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அரசியல் கட்சிகள் மூலம் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 19 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள இந்த மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகளில் 484 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 352 பேருமாக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 07 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில் 490 பேரும் 17 அரசியல் கட்சிகளில் 170 பேருமாக 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அடுத்ததாக திருகோணமலை, மட்டக்கள ப்பு, மொனறாகலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கூடுதலான அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன. இந்த மாவட்டங்களில் தலா 17 கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தடவையே கூடுதலான கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதவி முத்திரை பதிக்கப்படாமலும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாமலும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்புமனுக்களும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 35 நியமனப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டன.
கண்டி மாவட்டத்தில் 12 பேரைத் தெரிவுசெய்வதற்காக 14 அரசியல் கட்சிகளில் 210 பேரும் 17 சுயேச்சைக் குழுக்களில் 225 பேருமாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 07 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 140 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 160 பேருமாக 300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 09 பேர் தெரிவு செய்யப்படவுள்ள யாழ். மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 168 பேரும் 8 சுயேச்சைக் குழுக்களில் 96 பேருமாக 264 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

Friday, February 26, 2010

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி................

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயூள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவூம் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார்.
தேசியம் அரசியல் என்று கூறிக்கொண்டு இனியூம் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் மக்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருக்கும் விடயங்களை நிறைவேற்றுக்கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அந்தத் தவறையே மேற்கொள்கிறது. அவர்களின் செயற்பாட்டை தேர்தல் மேடைகளில் அம்பலப்படுத்துவேன். 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை உள்ளிட்ட பிரதேசங்களின் மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க ஜனாதிபதியூடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தங்கேஸ்வரி மேலும் கூறினார்

Thursday, February 25, 2010

ஊர்வலத்துக்கு பதில் பாற்சோறு வழங்கல், இரத்த தானம், சிரமதானம் புதிய அரசியல் கலாசாரம் அம்பாந்தோட்டையில் ஆரம்பம்......

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை (26.02.09) தாக்கல் செய்யும் அதேவேளை அம்பாந்தோட்டையில் புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான ஐ. ம. சு. மு. வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அன்றைய தினம் அம் பாந்தோட்டையில் ஊர்வலம் எதுவும் இடம்பெறாது.
அதற்கு பதிலாக விசேட முன்னுதாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக வீரக்கெட்டிய நீலப் படையணி அலுவலகத்திலிருந்து அவர் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் பாற்சோறு வழங்குதல், இரத்த தானம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் இடம்பெறும். அத்துடன் மாவட்டம் முழுவதும் சிரமதான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் விகாரைகளில் மத வழிபாடுகள் இடம்பெறும் என்று அவர் மேலும் கூறினார்.
அம்பாந்தோட்டையில் இருந்து நாட்டுக்கு அரச தலைவரொருவரை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதேபோல் நாம் நாட்டுக்கும் உலகத்துக்கும் புதிய அரசியல் தரிசனத்தையும், அரசியல் கலாசாரத்தையும் அறிமுகப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் 5 மாவட்டங்களில் தமிழ்க் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் பல புதுமுகங்கள் களத்தில்..............

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை நேற்று தாக்கல் செய்தது. யாழ்ப்பாணம்,வன்னி,திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.முன்னாள் உறுப்பினர்களில் ஒன்பது பேர் மட்டுமே இம்முறை போட்டியிடுகின்றனர். இதேவேளை முன்னர் தெரிவான பதினொரு பேர் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரை ரெட்ணசிங் கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.
அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோருக்குக் கூட்டமைப்பு சந்தர்ப்பம் வழங்காததால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டி யிடுகின்றனர்.
சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவூம் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், இமாம், எஸ். ஜெயானந்தமூர்த்தி உள்ளிட்ட 11 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேம சந்திரன் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சிறில், கஜேந்திரன் ஆகி யோர் போட்டியிட விண்ணப்பித்திருந்தும் அவர்கள் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
புதிய முகங்களாக உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், சட்டத்தரணி ரெமீடியஸ், முன்னாள் டிறிபேர்க் கல்லூரி அதிபர் அருந்தவச் செல்வம், மாவை சேனாதி ராஜாவின் செயலாளர் குலநாயகம், ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் அதன் தலைவர் அ. விநாயகமூர்த்தியூம் முன்னாள் யாழ். மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே. சிவஞானமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மற்றைய கட்சிகள் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யூம்.

மட்டு. மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியூம் மேலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று காலை நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியூமான சுந்தரம் அருமைநாயகத்திடம் இந்த நியமனப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், இ. நித்தியானந்தம், கு. சௌந்தரராசா, க. ஆறுமுகன், சீ. யோகேஸ்வரன், த. சிவநாதன், சு. சத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், கு. சௌந்தரராசா ஆகிய மூவரும் முன்னாள் எம்.பிக்களாவர்.

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பட்டியலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவூம் ஏனைய வேட்பாளர்களாக நடேசு சிவசக்தி, சு. நோகராதலிங்கம், எஸ். சுசைதாசன், பெ. பழனியாண்டி, து. ஜெயகுலராசா, சி. செல்வராசா, எஸ். பீ. எஸ். பீ. சிராய்வா, கு. லோக சௌந்தரலிங்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டம்

தோமஸ் விலியம் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட கே. மனோகரன், சந்திரநேருசந்திரகாந்தன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோகுமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

Tuesday, February 23, 2010

த.தே.கூ .விலிருந்து விலகிய தங்கேஸ்வரி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு .....

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கே.தங்கேஸ்வரி உள்ளிட்ட சிலர் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய வி.முரளிதரன்( கருணா அம்மான்) அவர்களும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ் வேட்பாளர்கள் கைச்சாத்திட்டதன் பின்னர், இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டே ஜனாதிபதியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பிலும், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிகாந்தா தலைமையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு................

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியூள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியூள்ளார்.
அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவூம் செயலாளராக தானும் செயற்படவூள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியூள்ளதாகவூம் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியூள்ளார்.

த. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி.........

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வ ரியும் வன்னி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர். தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திரத்தில் கையொப்பமி ட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22/02/09) கையொப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Monday, February 22, 2010

அமைச்சர் அமீர் அலி மட்டு மாவட்ட குழு தலைமை வேட்பாளா பசில் ராஜபக்ஷ தலைமையில் கம்பஹாவில் வேட்புமனு தாக்கல்.................

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் அமீர் அலி தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதோடு முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டனர்.

இப்பெயர்ப் பட்டியலில் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி த. தங்கேஸ்வரி, முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலி ஸாஹிர் மௌலானா, ரமேஷ் கலைச்செல்வன், பலனித்தம்பி குனசேகரம், கே. சத்தியவரதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கட்சி முதன்மை வேட்பாளர்களினால் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஐ.ம.சு முன்னணி கம்பஹா மாவட்டக் குழுத் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் தினங்களில் குழுத் தலைவர்களினால் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது கூட்டம் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கம்பஹா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஐ. ம.சு. முன்னணி ஏற்கெனவே 17 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை பூர்த்தி செய்துள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை வன்னி மாவட்டத்திற்கு தனது தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், முன்னாள் எம்.பி. திடீர் தௌபீக் ஆகியோரும், மட்டு. மாவட்டத்தில் அமைச்சர் அமீர்அலி மற்றும் மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார்.

இதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோரும் வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிட உள்ளதாக அறிய வருகிறது.

அ.இ.மு.கா 6 மாவட்டங்களில் போட்டியிட உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பி.தயாரத்ன முன்னாள் எம்.பி. ஏ. எம். எம். நௌசாத் முன்னாள் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் சரத் வீரசேகர ஆகியோர் போட்டியிடவுள்ளதோடு அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து ஆராயப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

திருகோணமலை மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்களும் துரிதமாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு தினங்களேயுள்ள நிலையில், ஐ.தே.க, ஜே. வி.பி. தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்கலான கட்சிகள் இன்னமும் தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறியில் உள்ளன. எதிர்க்கட்சிகளே இந்தக் குழப்பகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும் சில கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நேற்று வெளியிட்டிருந்தன.

Friday, February 19, 2010

பாகிஸ்தானில் பனிச்சரிவு ஒரு கிராமமே புதைந்து இதுவரை 60 பேர் பலி.......

பாகிஸ்தானில் குண்டுகள் தான் தினம் வெடித்து மக்களை கொன்று குவித்து வருகின்றதென்றால், இப்போது பனிச்சரிவும் அவர்களை விட்டு வைக்கவில்லை போலும்.
பாகிஸ்தானின் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள காண்டியா பள்ளத்தாக்கு பனி பிரதேசம் நிறைந்த பகுதி. அங்கு பனி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது பஹாரோ கிராமம்.
அங்கு நேற்று திடீரென பனிப்பாறைகளில் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்தக் கிராமமே பூமிக்குள் புதைந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின.
சாலைகளும் சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
பனிப்பாறை மற்றும் மண் சரிவுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகள் தாமதமாகவே நடக்கின்றன. பெஷாவரில் இருந்து உணவு பொருட்களுடன் சென்ற ஹெலிகொப்டரால் அங்கு தரை இறங்க முடியவில்லை. எனவே நிவாரணப் பணிகளும் மந்த கதியிலேயே நடந்து வருகின்றன.

Thursday, February 18, 2010

சீனா, ரஷ்யா, கொரியா நாடுகளில் நில நடுக்கம் பாதிப்பு எதுவுமில்லை.......

சீனாவில் உள்ள யாஞ்சி என்ற இடத்தில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரஷ்யாவின் எல்லையில் உள்ள பகுதியாகும். இதனால் ரஷ்யாவின் விலாடி போஸ் விக், வட கொரியாவில் உள்ள காவ்ஜின் ஆகிய இடங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
ஆனால் 3 நாடுகளிலுமே சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. சீனாவில் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி மக்கள், நாங்கள் நில நடுக்கம் எதையும் உணர வில்லை என்றே தெரிவித்தனர்.
நில நடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 6.7 புள்ளியாக பதிவாகி இருந்தது. பூமிக்கு கீழே 98 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்க மையம் இருந்தது.
அதிக ஆழத்தில் நில நடுக்க மையம் இருந்ததால் நில நடுக்கம் அதிக சக்தி கொண்டதாக இருந்தாலும் பாதிப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நியூசிலாந்து நாட்டுக்கு சொந்தமான கெர்மேடக் தீவிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.8 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இதிலும் சேதம் ஏதும் இல்லை.

Wednesday, February 17, 2010

வேட்பு மனுக்களை ஏற்பதற்கான பணிகள் பூர்த்தி இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கான விண்ணப்பத் திகதி 26 வரை நீடிப்பு.....

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை மறுதினம் (19) ஆரம்பமாக உள்ளதோடு, வேட்பு மனுக்களை கையேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.
வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் நேற்று (16) உயர்மட்டக் கூட்டமொன்று தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், வேட்பு மனுத்தாக்கலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் ஆராயப்பட்டதாக சுமணசிரி தெரிவித்தார். சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.
இதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க இன்று வரையே (17) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லாததால் 26 ஆம் திகதி வரை அதனை நீடிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வசதி அளிக்கப்பட உள்ளது. இடம்பெயர்ந்தோர் தாம் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் அத்தாட்சியுடன் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உள்ள பிரதேசங்களில் 2008 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் கூறியது.
இதேவேளை, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளன. ஐ.ம.சு. முன்னணி 17 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டி யல்களை பூர்த்தி செய்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த வார இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ள தாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ் வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ரி.எம்.வி.பி., ஈ.பி.டி.பி. போன்ற கட்சி களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட எதிர்க் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக அறிய வருகிறது. ஐ.தே. முன்னணி யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள தோடு, சரத் பொன்சேகா தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஜே.வி.பி. முயன்று வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட தயாராகி வருவதோடு, மனோகணேசன் தலைமையிலான கட்சியும் ரவூப்ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ¤ம் தேர்தலில் இணைந்து, தனித்து போட்டி யிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் பேசி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி.க்கள் சிலருக்கு இம்முறை தேர்த லில் போட்டியிட அனுமதி கிடைக்காது எனவும், இவர்கள் வேறு கட்சிகளில் இணைந்து போட்டியிட தயாராவதாகவும் அறிய வருகிறது.
இதேநேரம் ஐ.ம.சு. முன்னணி திங் கட்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதோடு, வேட்பு மனுத்தாக்கல் 26 ஆம் திகதி நண்பகலுடன நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

Friday, February 12, 2010

வடக்கு கிழக்கில் சுயதொழிலை ஊக்குவிக்க புதிய கிளைகள்....

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுயதொழிலை ஊக்குவிக்க புதிய கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்; மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு 5 பில்லியன் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஐம்பதினாயிரம் முதல் இரண்டரை மில்லியன் வரை கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்
விவசாயிகள் உள்ளிட்ட தொழிற்துறையினருக்கு அவர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்த கடன் வழங்கப்பட்டுள்ளது.
கிளி நொச்சி, மல்லாகம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இயங்கிய கிளைகளை மீளத் திறப்பதுடன் புதிய கிளைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம். தற்போது வடக்கில் 30 கிளைகளும் கிழக்கில் 34 கிளைகளும் உள்ளன.
மேலும் 30 கிளைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கை வங்கி கடந்த 60 ஆண்டு காலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது.

Thursday, February 11, 2010

ஜனாதிபதியின் ரஷ்யா பயனத்தால் பல நன்மைகள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தகவல்......

ஜனாதிபதி ஜஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலால் நாட்டுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களுக்கான உதவிகளைப் புரிய ரஷ்யா முன்வந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு பொதுவாக குறுகிய ஒரு நேரத்துக்கே இடம்பெறுவதுண்டு. எனினும் இலங்கை ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
இதன்போது பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கு ரஷ்யா சார்பில் திருப்திகரமான வரவேற்பும் கவனமும் அளிக்கப்பட்டது.
அதன் பிரதிபளிப்பு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு வழங்குவதாக விளங்குகின்றது. இலங்கையின் கணிமவள ஆராய்ச்சிக்கு உதவ அந்நாடு முன்வந்துள்ளது.
இலங்கை தேயிலை மிகக் கூடுதலான தொகையாக வருடத்துக்கு 42 மில்லியன் கிலோ ரஷ்யாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு 20 வீதம் தீர்வை வரி அறவிடப்படுகிறது. அதற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடப்பட்டது. அது குறித்து கவனம் செலுத்த ரஷ்யா தரப்பினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன் ஊடகப்பரிமாற்றுத் திட்டம் ஒன்றுக்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, February 10, 2010

புனர்வாழ்வளிக்கப்பட்ட 273 புலிப்படையணிச் சிறுவர்களை பெற்றௌரிடம் கையளிக்க ஏற்பாடு.....

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளின் அனைத்து முன்னாள் சிறுவர் படையணியினரையும் பெற்றோரிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதயிறுதியளவில் அவர்களில் 273 பேரை பெற்றோர்களிடமோ பாதுகாவலர்களிடமோ ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற்ற போது 514 சிறுவர் படையணியினர் புனர்வாழ்விற்காக ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை 120 சிறார்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜகத் வெல்லவத்த தெரிவித்தார்.
இதனடிப்படையில் தற்போது கல்வி போதிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்களுள் 273 பேரை பொற்றோர் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மாத்திரமே அவர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகள் வழங்கப்படும் நிலையில் மே மாதமளவில் ஏனையோரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் பெற்றோராலோ பாதுகாவலர்களாலோ பொறுப்பேற்கப்படாதவர்களுக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்பெஃடெல் கண்காட்சி இம்மாதம் 26 முதல் 28 வரை......

இன்பெஃடெல் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பக் கண்காட்சியை இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தால் நாட்டை எழுச்சிபெறச் செய்வோம் என்ற தொனிப்பொருளிலான இக்கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 அம் திகதி வரை நடைபெறவுள்ளது.வடபகுதி மக்களின் தகவல் தொழில் நுட்பக் கல்வியின் மேம்பாட்டை அடிப்படையாகக்கொண்டும் அப்பிரதேச இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும் இக்கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது.இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமும் கல்வி அமைச்சும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது....

சரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வ தேச நாடுகள் தலையிட முடி யாதென வெளிவிவகார அமை ச்சர் ரோஹித்த போகொல் லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமை யவே இக்கைது இடம்பெற்றி ருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரு ம்பியுள்ள அமைச்சர் அமைச் சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.
ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்ப தற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர்.
தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.
சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

Tuesday, February 9, 2010

மன்னார் மாவட்ட கிராம அபிவிருத்திக்கு 12 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் ரிஷாத் தகவல்.......

மன்னார் மாவட்டத்தின் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களின் அபிவிருத்திக்காக 12 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட மீள் எழுச்சி திட்டத்தின முதற்கட்ட நடவடிக்கையாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ளதாகவும தேச மீள் நிர்மாண அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் குறிப்பிட்டார். இதன் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
மீனவ தொழிலாளர்களுக்கு இதுவரை அமுலில் இருந்த பாஸ் நடைமுறை மற்றும் கெடுபிடிகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே கெடுபிடிகள் இன்றி மன்னார் மாவட்ட மக்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மீனவர்கள் தங்களது அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு பாஸ் ஒன்றை எடுத்தே இதுவரை சென்றுவந்ததுடன் அந்த பாஸ் நடைமுறையும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மன்னார் மாவட்ட மக்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதுடன் மன்னார் பி. எம். சி. சோதனைச் சாவடியில் அமுலில் இருந்த சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் அகற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தப் பிரதேசத்தின் ஊடாக செல்லும் மக்கள் குறித்த சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Monday, February 8, 2010

ஜெனரல் சரத் பொன்சேகா கைது.....

முன்னாள் இரானுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத்பொன்சேகாவை, இரானுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டொலர் கடனுதவி இன்று ஒப்பந்தம் கைச்சாத்து......

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயம் காரணமாக ரஷ்யா 300 மில்லியன் டொலரை இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்க இணங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று மொஸ்கோவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட பிறகு மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
நேற்று ரஷ்ய ஜனாதிபதியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த உதவி தவிர மேலும் பல உதவிகளை இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளராக அனுஷ பல்பிட்ட பதவியேற்பு ...........

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பல்பிட இன்று தனது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான நிகழ்வு கொழும்பிலுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்த ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்கியல் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றுள்ள அனுஷ பல்பிட்ட இலங்கை நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் பெற்றுள்ளவர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பதிவியெற்றுள்ள அனுஷ பல்பிட்ட தொடர்ந்தும் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, February 6, 2010

யாழ். கோட்டையைப் புனரமைக்க நெதர்லாந்து நிதி உதவி.....

யாழ்ப்பாணக் கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம், 61.1 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனைத் தவிர மேலதிக நிதியான 42.4 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். இதன்படி முதலாவது வேலைத்திட்டம், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2012 ஆம் டிசம்பர் வரையிலுமான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும். அதேவேளை, நெதர்லாந்து அரசாங்கம் மேலும் பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு நிதியுதவியை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் திருகோணமலையில் உள்ள பழைய டச்சுக் கடற்படை ஆணையாளர் வீடும் உள்ளடங்கவுள்ளது. இதற்காக நெதர்லாந்து அரசாங்கம் 75 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Thursday, February 4, 2010

இலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ ......

இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்" என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன். வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகையில்...

இன்று எமது சுதந்திர தினம். நாம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம்.இன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம்.இது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள். சம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும்.தாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை.அபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும் என்றார்.யுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம் பெறும் சுதந்திர தின வைபவம் என்பதாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் மிக முக்கியமான வைபவம் இது என்பதாலும் உள்நாட்டு, சர்வதேச மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 3, 2010

பொதுத் தேர்தலின் பின்னரே ஓய்வூபெறுவது குறித்து முடிவு தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு...

எதிர்வரும் பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்த பின்னரே தாம் பதவி விலகுவது குறித்து முடிவு எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்கா தெரிவித்தார்.
ஜனாதபதித் தேர்தலின் பின்னர் பதவி விலகுவதாக தாம் முன்னர் அறிவித்திருந்த போதிலும் அதில் மாற்றம் கொண்டு வர நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இநதத் தகவல்களை வெயளியிட்டார்.
தமது முடிவின் மாற்றம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் பல காரணங்களை முன்னிட்டு பதவி விலகுவது குறித்து முன்னர் நான் அறிவித்த முடிவில் மாற்றம் கொண்டுவர நேரிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை என்னைச் சந்தித்த சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் தங்களை கைவிட்டுச்செல்லாமல் அந்தத் தேர்தலையும் நடத்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகொள் விடுத்தார்கள். நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும் வேணடும். எனது சட்ட ஆலோசகர்களுடன் இந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய கால அவகாசம் தேவை. மற்றும் ஒரு முக்கியமன விடயம் என்னவென்றால் எதிரணி முக்கியஸ்தர்களும் என்னைச் சந்தித்து எதிர்வரும் பொதுத்தேர்தலையும் நடத்தி முடிக்குமாறு கெட்டுக்கொணடார்கள்.
இவ்வாறான வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டே எனது முடிவில் மாற்றம் கொண்டுவந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்

Tuesday, February 2, 2010

ஜனாதிபதியின் இரண்டாம் பதவிக்காலம் 2010 நவம்பா; 19 ஆம் திகதி ஆரம்பம் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.....

இலங்கையின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது இரண்டாவது பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என உச்ச நீதி மன்றம் இன்று அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 129 ஆவது விதந்துரையின் கீழ் அவரது இரண்டாவது பதவிக்காலம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டிருந்தார்.
அரசியலமைப்பின் விதிகளின்படி உச்ச நீதி மன்றத்தின் கருத்து 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையிலேயே உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அவரது இரண்டாவது பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் தொடர்ந்து ஆறு வருடங்கள் வரை என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் உச்ச நீதி மன்றக் குழுவில் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க நீதியரசர் ஜகத் பாலபட்டபெந்தி நீதியரசர் கே. சிறிபவன் நீதியரசர் பீ.ஏ. ஏக்கநாயக்க நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க மற்றும் நீதியரசர் எஸ்.ஐ. இமாம் ஆகியோர் இடம்பெற்றனர்.

35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள உயர்வு தொழில் திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்துகிறது...

தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு 15 சதவீதம் அல்லது அதனை விடக் கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் தனியார் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் தொழில் திணைக்கள ஆணையாளர் ஜி. எஸ். பதிரண தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 2500 ரூபா சம்பள உயர்வுடன் இணைந்ததாக தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக 43 சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தின் படி தோட்ட ஊழியர்களுக்கு ஜனவரி 15 ஆம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார்த்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 5750 ரூபாவாகும். ஆனால் பல தனியார்த் துறை ஊழியர்கள் இதனை விட பல மடங்கு அதிக சம்ப ளம் பெறுவதாக கூறிய அவர், சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
தற்பொழுது சகல தனியார் ஊழியர்களுக்கும் 100 ரூபா முதல் 300 ரூபா வரை வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டில் தனியார்த் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாக தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார்த் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, மேலதிக நேரக்கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுக ளும் அதிகரிக்கப்படவுள்ளன.

Monday, February 1, 2010

முன்னளாள் புலி உறுப்பினர்கள் 56பேர் பெற்றோர்களிடம் கையளிப்பு!

அரசாங்த்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் வெலிகந்த மற்றும் நவசென்புர ஆகிய இடங்களிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் தொழில்பயிற்சியளிக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம். தயா ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற வைபவமொன்றில் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தத்தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீள்குடியேற்றம் மீண்டும் நாளை ஆரம்பம் பூநகரியில் நாளை ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீண்டும் நாளை இரண்டாம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கமைய ஆயிரம் பேர் பூநகரிக்கு நாளை அனுப்பி வைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தமது சொந்த இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்ட அனைவரையும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ரிசாட்டுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்ட போதும் பெரும் பாலான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஓரளவு தாமதம் அடைந்ததாகவும் நாளை முதல் மீண்டும் இப் பணிகளை கட்டம் கட்டமாக துரித கதியில் முன்னெடுக்க விருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் பணிப்பினையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதற்கமையவே கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் ஆயிரம் பேர் நாளை செவ்வாய்க்கிழமை பூநகரிக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் ரிசாட் கூறினார்.
நிவாரணக் கிராமங்களிலிருந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றவர்களும் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்தினூடாக தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப விரும்பின் அதற்கான ஏற்பாடுகளும் வவுனியா அரசாங்க அதிபரினூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை, இதுவரை முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளினூடாக 17 ஆயிரம் பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மேலும் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரையிலானோர் கிளிநொச்சியில் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போரின் வாழ்க்கைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உலக வங்கி பாரிய நிதியுதவியின் கீழ் பல செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.