Monday, February 1, 2010

மீள்குடியேற்றம் மீண்டும் நாளை ஆரம்பம் பூநகரியில் நாளை ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீண்டும் நாளை இரண்டாம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கமைய ஆயிரம் பேர் பூநகரிக்கு நாளை அனுப்பி வைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தமது சொந்த இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்ட அனைவரையும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ரிசாட்டுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்ட போதும் பெரும் பாலான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஓரளவு தாமதம் அடைந்ததாகவும் நாளை முதல் மீண்டும் இப் பணிகளை கட்டம் கட்டமாக துரித கதியில் முன்னெடுக்க விருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் பணிப்பினையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதற்கமையவே கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் ஆயிரம் பேர் நாளை செவ்வாய்க்கிழமை பூநகரிக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் ரிசாட் கூறினார்.
நிவாரணக் கிராமங்களிலிருந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றவர்களும் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்தினூடாக தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப விரும்பின் அதற்கான ஏற்பாடுகளும் வவுனியா அரசாங்க அதிபரினூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை, இதுவரை முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளினூடாக 17 ஆயிரம் பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மேலும் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரையிலானோர் கிளிநொச்சியில் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போரின் வாழ்க்கைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உலக வங்கி பாரிய நிதியுதவியின் கீழ் பல செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

No comments:

Post a Comment