Wednesday, September 30, 2009

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

இந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது. இது மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 29, 2009

வவுனியா-யாழ். பஸ் சேவை காலை வேளையில் ஆரம்பம்

வவுனியாவில் இருந்து 'ஏ9' வீதியூடாக குடாநாட்டுக்குத் தினமும் காலை 10.00 மணிக்கு பஸ் சேவைகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சேவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டை நோக்கி வவுனியா பஸ் தரிப்பிடத்திலிருந்து காலை 10.00 மணிக்கு தினமும் 10 பஸ்கள் புறப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது வரை, வவுனியாவிலிருந்து யாழ். குடாநாட்டை நோக்கி ஏ9 வீதியூடாக மாலை மூன்று மணிக்குப் பின்னர் வெவ்வேறு நேரங்களில் பஸ்கள் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Monday, September 28, 2009

பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து 500 பேர் இணைப்பு

வட மாகாணத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு 500 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து 500 பேரை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெற்றன. நாளையும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமென யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச். மாரப்பன தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.இந்த நேர்முகப் பரீட்சைக்கு இப்பிரதேசங்களிலிருந்து இதுவரை மொத்தமாக 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் சுமார் 400 பெண்களினது விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.நாட்டிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும். இதன் அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என ஜி.எச். மாரப்பன மேலும் குறிப்பிட்டார்.

Saturday, September 26, 2009

உங்களால் முக்கனிகளும் விளைகின்றது


முடியாது எனும் கூற்றுக்கு----ஒரு
முற்றுப்புள்ளி வைத்துமுடியும் என்ற கூற்றுக்கு----இரு
முற்றுப்புள்ளி வைத்துமுன் இறங்கிய எங்கள் வீரனே
முற்பிறப்பில் என்ன பலன்----செய்தோம்
முரளிதரனே--உமை கருணை----கடலாய் பார்க்க

முயற்சிகள் ஆயிரம் ஆயிரம்
முன்னோக்கி வந்த போதும்
மூவினங்களும் புன்னகை தவழ
முடிந்தது கர்வம் நாடகம்
மூவேந்தரும் உங்களில்--சேர்ந்தனரோ

முக்கனிகள் இப்போது
முகம் சுழிக்காமல் விழைகிறது
முகம் காட்ட மறுத்தமுகில்கூட்டங்களும்
முகவரிதந்து போனது
முன்பில்லாத மழையும் பெய்தது

முதிர்வு உங்களுக்கு
முதிர் பருவத்திலும் வேண்டாம்
முக்கடவுளையும் என்னும்
மூச்சு உள்ளவரை நாங்கள்
மூன்று வேளையும்வணங்கி தொழுவோம்
முரளிதரா உங்களுக்காக..........................

கிழக்கின் முழக்கம் - 2009 கல்லடியில் மாபெரும் விழா

மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கின் முழக்கம் – 2009 மாபெரும் விழா இன்று காலை முதலில் நள்ளிரவு வரை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெறுகிறது.
மட்டக் களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொள்ளவுள்ள இவ்விழாவில் நீச்சல் போட்டி, ஓட்டப் போட்டிகள், உதைபந்தாட்டம், பீச்போல் மற்றும் தோணி ஓட்டம், அலங்காரப் போட்டி, மெஜிக் காட்சி மற்றும் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவோருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இறுதி நிகழ்வாக இசைக் கச்சேரியும், வாண வேடிக்கைகளும் நடைபெறவுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் இன, மத, பேறுபாடுகள் இன்றி ஒரே இடத்தில் சங்கமிக்கும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவிற்கான ஊடக அனுசரணையை ஸ்ரீ டி.வி. வழங்குகிறது. இத்தாலி ரோம் நகரை மையமாகக் கொண்டு 152 நாடுகளில் ஒலிபரப்புச் சேவைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 24, 2009

அம்பாறையில் சிலர் இன்று சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பு.....

வுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து, அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களில் இன்றும் ஒரு சிறு தொகையினர் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் நேற்று முதலாவது நாள் விடுவிக்கப்பட்டனர். இன்று இரண்டாவது நாளாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் விடுவிக்கப்பட்டு, பிரதேச செயலக அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டனர். பின்னர், பொலிஸ் - இராணுவ பாதுகாப்புடன் அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை 10 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 29 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாவட்டத்தில் சிங்கள மகா வித்தியாலய முகாமில் 75 குடும்பங்களைக் கொண்ட 238 பேரும், குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமில் 45 குடும்பங்களைக் கொண்ட 127 பேரும் என 123 குடும்பங்களைக் கொண்ட 367 பேர் கடந்த 12ஆம் திகதி முதல் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் நேற்று குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டும் 5 குடும்பங்களைக் கொண்ட 15 பேர் இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Tuesday, September 22, 2009

ஏறாவூர் பெண்கள் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களை அமைச்சர் கருணா அம்மான் சந்தித்தார்

ஏறாவூர் சிறி லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஆசாத் தலைமையில் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பெண்கள் அபிவிருத்திச் சங்கத்தினை தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கருணா அம்மான் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் பெண்களுக்கான புதிய தொழில்நுட்ப முறையிளான பயிற்சிகளை முதலில் வளங்கவேண்டும் எனவும், அதனை அவர் முன்னெடுப்பதாகவும் இவ்வாறான உயிரோட்டமுள்ள பெண்கள் சமுதாயத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் எதிர்காலத்திற்காக தன்னால் ஆன அனைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக கூறி இந்த இப்தார் நோம்பு தினத்தில் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட எம் சகோதர முஸ்லிம் சகோதரிக்கும் விசேட நன்றியையும் கூறினார். இந் நிகழ்விற்கு மட்டு மாநகர மேயர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களும் சமூகமளித்து இருந்தார்.

வாகரையில் 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாடசாலைக் கட்டிடத்தினை ஜனாதிபதி ,கருணா அம்மான் திறந்து வைத்துள்ளார்.

கிழக்கு மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்ட எமது அமைச்சர் கருணா அம்மான் அவர்களின்ஏற்பாட்டில்
வாகரையில் 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாடசாலைக் கட்டிடத்தினை அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் தற்பொழுது திறந்து வைத்துள்ளார். இப் பாடசாலையானது இலங்கையிலே காணப்படுகின்ற அதி உயர்ந்த வசதிகளைக் கொண்ட மூன்று பாடசாலைகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது.

Monday, September 21, 2009

இடம்பெயர்ந்தவர்களில் மேலும் ஒரு தொகுதியினரை சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை....

இடம் பெயர்ந்து உறவினர் நண்பர்களது வீடுகளிலும், வேறிடங்களிலும் வசித்து வந்த 5320 பேரை அவர்களது சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு வவுனியாவில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களாகிய விநாயகமூர்த்தி முரளிதரன், எச்.எம்.சந்திரசேன, ரீ.பி.எக்கநாயக்க ஆகியோரும், வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, வவுனியா அரசாங்க அதிபர், முக்கிய இராணுவ பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, பயங்கரவாத நிலைமை காரணமாக சொந்தக் கிராமங்களைவிட்டு பல வருடங்களாக இடம்பெயர்ந்திருந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்று இங்கு கூடியுள்ள நீங்கள் உங்களது சொந்த இடங்களுக்குச் செல்கின்றீர்கள். உங்களை மீள் குடியேற்றுவதற்காக இராணுவத்தி்னர், பொலிசார் மற்றும் சிவில் அதிகாரிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தி்யில் செயற்பட்டுள்ளார்கள். என தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் மக்கள் இயற்கை அழிவுகள், மனிதர்களின் செயற்பாடுகளின் காரணமாக இடம்பெயர்ந்துள்ளார்கள். எனவே இலங்கையில் மட்டும் மக்கள் இடம்பெயரவில்லை. எமது நாட்டில் நிலவிய பயங்கரவாத நிலைமை காரணமாக நீங்கள் உங்களது சொந்த கிராமங்களைவிட்டு வெளியேற நேர்ந்தது. பயங்கரவாத நடவடிக்கைகள் உங்களை வெளியேற்றுவதற்கு அதிக நேரம் எடுக்க வில்லை, ஆனால் உங்களை உங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்குப் பாரிய பணிகளை பலரும் செய்ய வேண்டியிருக்கின்றது. இன்று உங்களது சொந்த இடங்களுக்குச் செல்கின்ற நீங்கள் உங்கள் விவசாயத் தொழில்களை மேற்கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இன்னுமொரு தடவை இந்த நாட்டில் பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களைப் போன்று இடம்பெயர்ந்து இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்ய வசதியாக இருக்கும். கிராமங்களில் நிலைமைகள் மோசமடைந்தால் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் குடியமர்த்துவது இயலாத காரியமாகிவிடும். எனவே இந்த விடயத்தை கவனத்திற்கொண்டு நீங்கள் செயற்பட வேண்டும். வரவேற்புரை நிகழ்த்திய வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், 35 கிராமங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாகவும், இவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஜனாதிபின் பணிப்பின்பேரில் ஆலோசகராகிய பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில், இராணுவ பொலிசாரின் உதவி ஒத்துழைப்புடன் அந்தந்த இடங்களில் அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மீளக்குடியமர்பவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர்களினால், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வைபவரீதியாக வழங்கப்பட்டன.