Sunday, October 31, 2010

சட்டத்துக்கு மாறாக செயற்பட்டால் கடும் நடவடிக்கை.

பல்கலைக்கழக விடுதிகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வெளியாருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்களின் விடுதி கடந்த இரண்டு வருடங்களாக ஆண் மாணவர்களால் பலவந்தமாகப் பயன் படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஜே.வி.பி. மாணவர் களின் தலையீட்டைத் தொடர்ந்து பல் கலைக்கழக நிர்வாகமும் விடுதியை ஆண் மாணவர்களுக்கு வழங்கிவிட்டது. அவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பி. வெளி மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தது.
அவ்வாறு அனுப்பப் பட்ட வெளி மாணவர்க ளில் சிலர் பல்கலைக் கழகத்தை முடித்து வெளியேறியவர்கள், சிலர் பல்கலைக்கழகத் துக்குத் தகுதி பெறாதவர்கள் இவர்களாலேயே பல்கலைக்கழகம் நெறிப்படுத்தப்பட்டது. இந்த சக்திகளை நாம் அடையாளம் கண்டு நீக்கிவிட்டோம். தற்பொழுது பல்கலைக் கழகம் 90 வீதம் சரியான முறையில் செயற்படுகிறது.
இதுவரை காலமும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து இடைநிறுத்தப் படுகின்ற போது, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. இனிமேல் அவ்வாறில்லை சட்டத்துக்கு விரோதமாகச் செயற்படும் மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
நாட்டின் உயர் கல்வித் துறையில் அரசாங்கம் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக கல்வியைத் தொடரும் சூழலை ஏற்படுத்துவோம்.
தேவையற்ற விடயங்களில் ஈடுபட்டு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடித்துவிடக்கூடாதென அமைச்சர் கூறினார்.

Saturday, October 30, 2010

யுத்த பாதிப்பு செங்கலடி மக்களுக்கு 11 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள் குடியமர்த்தப்பட்ட ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச மக்களுக்கு 11 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவின் ஈரளக்குளம் கிராமசேவககர் பிரவில் இலுக்குப்பொத்தானை, முத்தன்குமாரவெளி, விளான்தோட்டம் ஆகிய கிராமங்களில் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தால் வீடுகள் வழங்க தெரிவு செய்யப்பட்ட 45 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்திட்டத்தில் முதலில் 31 குடும்பங்களுக்கான வாழ்வாதர உதவிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வானது இன்று இலுக்குபொத்தானை கிராமத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.
இதில் நிறுவன இயக்குனர் அருட்பணி பேராசிரியர் த. ஸ்ரீதரன் சில்வெஸ்ரர் கால்நடைகளை (ஆடு,மாடு) கொள்வனவு செய்வதற்கான காசோலைகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
நிறுவக நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓ ஜெயானந்தன், நிதிமுகாமையாளர் பி. புண்ணியமூர்த்தி, மற்றும் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு ஏனையவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூபா. 34,000.00 வீதம் மொத்தமாக பத்து இலட்சத்து அறுபத்து நான்கு ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

Friday, October 29, 2010

இலங்கையின் வடக்கு கிழக்குமுன்னாள் முதலமைச்சர் தோழர்வரதராஐப்பெருமாள் புலம்பெயர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சுவிஸ்நாட்டிற்கு 31.10.2010 அன்று.

சர்வதேசபிராந்திய மகாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் தோழர் வரதராஐப்பெருமாள் பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டை நடாத்தி முன்னணிதோழர்களையும் மக்களையும் சந்தித்தபின் சுவிஸ் நாட்டிற்கு எங்கள் மக்களை காண வருகைதரவுள்ளார். வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரை நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் அமைச்சரிடம் கூறி அவரிடமிருந்து தெளிவான பதில்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். புலம் பெயர் மக்களையும் தோழர்களையும் சந்தித்து உரையாட முன்னாள் முதலமைச்சர் மிகவும் ஆவலாகவுள்ளார் என்பதினை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!!

தோழர் வரதராஐப்பொருமாள் அவர்களை சுவிஸ் நாட்டில் பேர்ன் சூரிச் ஆகிய மானிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாட எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பேர்ன் மானிலத்தில் 31.10.2010 காலை 10.00முதல் 13.00 மணிவரை கலந்துரையாடல் நடைபெறும்

முகவரி
mattenhof str 32
3007 Bern
swiss
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!!பேர்ன் தொடர்புகட்கு!!!
0041798117280 --- 0041798117280 Bern
0041797541317 --- 0041797541317 Bern
0041786859598--- 0041786859598 freiburg
0041783130889--- 0041783130889 Bern
சூரிச் மானிலத்தில் 31.10.2010 பிற்பகல் 15.00முதல் 18.00 வரை கலந்துரையாடல் நடைபெறும்

முகவரி

widmer str 100
8038 zürich

மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!! சூரிச் தொடர்புகட்கு!!!
0041792613331 --- 0041792613331 zü
0041797538517 --- 0041797538517 Ag
0041764061799--- 0041764061799 Ag
0041783164174 --- 0041783164174 Vs

Thursday, October 28, 2010

வெள்ளத்தினால் உயிரிழந்தோர் 68 ஆக அதிகரிப்பு தாய்லாந்தில்.

தாய்லாந்து வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 68 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இம்மாத ஆரம்பத்தில் பெய்யத் தொடங்கிய கடும் மழையினாலேயே பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மழை சிலநாட்களில் மேலும் அதிகரிக்குமென தாய். வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.
சுமார் 800 பேர்வரை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 1.6 மில்லியன் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தால் பெருஞ்சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளம் காரணமாக தாய்லாந்தின் பொருளாதார நிலையில், சுமார் 674 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டமேற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 27, 2010

நாடெங்கும் போதைவஸ்து வேட்டை இரு வாரங்களில் 7098 பேர் கைது 7927 கிலோ போதைப்பொருள் மீட்பு.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 7098 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 7050 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதுடன் 7927 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை மீட்டெடுத்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின் போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட் களையே பொலிஸார் கைப்பற்றியு ள்ளனர்.

ஆயிரக்கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் விசேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கஞ்சாவுடன் தொடர்புடைய 4413 சம்பவங்கள், ஹெரோயி னுடன் தொடர்புடைய 1858 சம்பவங்கள், பாபுலுடன் தொடர்புடைய 305 சம்பவங்கள், போதை தரும் லேகியங்களுடன் தொடர்புடைய 413 சம்பவங்கள், அபினுடன் தொடர்புடைய 3 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு

அமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட்டலின் கீழ் விசேட நடவடிக்கை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இந்த நடவடிக்கைகள் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் இதற்கான விசேட வேலைத் திட்டங்களை தீட்டியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட் டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 36 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tuesday, October 26, 2010

முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி 450 பேர் இன்று மீள் குடியேற்றம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 வீதமான மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் மீள்குடி யேற்றங்களை நிறைவு செய்ய உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் என். வேதநாயகம் நேற்றுக் கூறினார்.
இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் இன்று (26) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
30 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள் ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு துரிதமாக மக்களை மீள்குடியேற்றி வருவதாகவும் அரச அதிபர் கூறினார்.
ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது.
வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர்.
இதே வேளை, அண்மையில் முல் லைத்தீவு மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துமாறும் முழுமையான மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித் துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 18,799 பேரே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ள தாகவும் இவர்களில் 17,641 பேர் வவுனி யாவிலும் 1,158 பேர் யாழ்ப்பாணத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.

Monday, October 25, 2010

வைத்தியசாலைகளில் 24 மணிநேரமும் வெளிநோயாளருக்கு சிகிச்சை ஜனாதிபதி உத்தரவு..

அரச வைத்திசாலைகள் அனைத்திலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் இயங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறிப்பித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயாளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் பிரதான வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தவூம் அடுத்த கட்டமாக அதனை சகல வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Saturday, October 23, 2010

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்..

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இந்தத் திட்டத்திற்கு மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் ஆதரவு வழங்கும் என்றும் கூறினார். மரங்களை இயன்றளவு நட்டி, மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பசுமையான நாடு’ என்ற குறிக்கோளை அடைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Friday, October 22, 2010

அகாலமரணஅறிவித்தல் செல்வன் அமலதாஸ் புஸ்பாகரன் (பாபு)

ஈன்றவள் பாசமடிதனில் ஈசனின் பாதஅடிதனில்
06.07.1982 **************** 20.10.2010
இலங்கை மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும்கொண்டிருந்த செல்வன் அமலதாஸ் புஸ்பாகரன் (பாபு) அவர்கள் 20.10.2010 சுவிஸ் பேர்ன்மாநகரத்தில் அகாலமரணமடைந்தார் அன்னார். திருவாளர்அமலதாஸ் மேரிறோசறி தம்பதிகளின் அன்பு மகனும். சசிகரன். ரவிச்சந்திரன் செபஸ்ரிகரன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் சாசங்கி சஐத் வெகித் ஆகியோரின் மாமனாரும் தவராஜ் யோகராஜ் (சவுதிஅரேபியா) அன்ரன்ஜெயராஜ் (பிரித்தானியா) நவரத்தினராஜ் (ஜேர்மனி) மகாராஜ் பிரித்தானியா அன்பு மருமகனும் திருமதி கந்தசாமி திருமதி மேரி அஞ்சலி அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் உங்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு SWISS BERN BREMGARTEN STR 51 3008 BERN பார்வையிடும் நேரம் 23.10.10 சனிக்கிழமை காலை 8.00-19.00வரையும்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00முதல் அஞ்சலிநிகழ்வும் இடம்பெறும்
முக்கியகுறிப்பு

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அவர் பிறந்த இடமாகிய மட்டக்களப்பில் நடைபெறுமென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


செபஸ்ரிகரன் - சுவிஸ் 0041796935597
அற்புதராஜா - சுவிஸ் 0041319916119
அன்ரன்ஜெயராஜா- பிரித்தானியா 00442087651206
மகாராஜா - பிரித்தானியா 00442086794151
சசிதரன் - பிரித்தானியா 00442086850665
நவத்தினராஜா - ஜேர்மனி 00492501921909

Thursday, October 21, 2010

தமிழ்மக்கள் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு அரசியல் தலைவர்கள் மன்னிப்புக்கோர வேண்டும்கிழக்கு மாகாண முதலமைச்சர்.

தொண்ணூறுகளில் கிழக்கில் அப்போதைய இராணுவத்தினர் மக்களை சித்திரவதை செய்தனர். பலர் காலில் விழுந்தபோதும் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர். எனவே அன்று இவ்வாறான சம்பவங்களை இயக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அன்று மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவங்களே நான் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு காரணமாக அமைந்தன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மேலும் நாட்டில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சுயாதீனமாக இயங்க வைக்கப்படவேண்டும்.
இந்த விடயத்தில் நல்லிணக்க ஆணைக்குழு பாரிய வகிபாகத்தை வகிக்க முடியும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஆறு உறுப்பினர்கள் ஆணைக்குழு சார்பில் கலந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது

யுத்தம் முடிந்ததன் பின்னர் இவ்வாறான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்று தீர்மானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் பிரதமர் ஆட்சி முறை வந்த நிலையில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளும் புரிந்துணர்வின்மையும் ஏற்பட்டன. கல்லோயா குடியேற்றத் திட்டம் இதன் ஆரம்பம் எனலாம்.

அன்று செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அதனையடுத்து பண்டா செல்வா உடன்படிக்கை வந்தபோது அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அதனை எதிர்த்தார். அதன் காரணமாக பண்டாரநாயக்க குறித்த உடன்படிக்கையை கிழித்தெறிந்தார். அதாவது தமிழ் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் கிடைக்கப்போகின்றன என்று எண்ணியே ஜே.ஆர். அதனை எதிர்த்தார். பின்னர் டட்லி செல்வா உடன்படிக்கை வந்தபோது அப்போதைய எதிர்க்கட்சி அதனை எதிர்த்தது. அந்த உடன்படிக்கை மூலம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் முன்வைக்கப்பட்டன. எனவே அந்த விடயமும் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை. ஆனால் அந்த விடயத்தை எதிர்க்கட்சிகள் வேறுவிதமாக காட்டின. அதன் பின்னர் தமிழ் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அரசியல் மாற்றத்துடன் தமிழரசுக் கட்சி வீழ்ச்சிகண்டது. எனவே தமிழரசு கட்சியை கட்டியெழுப்புவதற்காக 1976 ஆம் ஆண்டு அவர்கள் வட்டுக்கோட்டை பிரகடனத்தை கொண்டுவந்தனர். இதனால் தமிழரசுக் கட்சி நாட்டின் எதிர்க்கட்சியாகவும் வந்தது. எனினும் அவ்வாறான ஒரு நகர்வை மேற்கொள்ள அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆளுமை இல்லாமையினால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். பல ஆயுத குழுக்கள் உருவாகின. பல முரண்பாடுகள் ஏற்பட்டன. அதனால் சகோதர படுகொலைகள் இடம்பெற்றன. இறுதியாக தமிழீழ விடுதலை புலிகள் தமிழீழத்தை பெறக்கூடிய அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆயுதங்களை வழங்கி குழப்பினார்

அதனையடுத்து ஜே.ஆர். ஜயவர்த்தன பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தார். தொடர்ந்து இந்தியா இந்த விடயத்தில் தலையிட்டு மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தியது. அன்று பண்டா செல்வா உடன்படிக்கையை எதிர்த்த ஜே.ஆர். ஜயவர்த்தன இறுதியில் அதனைவிட கூடிய அதிகார முறைமைக்கு இணங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனினும் மாகாண சபை முறைமையை எதிர்த்த பிரேமதாச பதவிக்கு வந்தார். அவர் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பிரபாகரனுடன் இணைந்து மாகாண சபை முறைமையில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன

அதன் பின்னர் 90 களில் புலிகளுக்கு எதிராக பிரேமதாச படையினரை அனுப்பினார். அதனால் அழிவுகள் ஏற்பட்டன. அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு நான் புலிகள் அமைப்பில் இணைந்தேன். அதன்படி பார்க்கும்போது முன்னாள் தலைவர்களான ஜே.ஆர். ஜயவர்த்தனவும் பிரேமதாசவும் துரோகமிழைத்தனர். அதாவது பிரேமதாச புலிகளைக் கொண்டு தந்திரமாக மாகாண சபை முறைமையை குழப்பினார். அதனால் அன்று இளைஞர்கள் கல்விமான்கள் சிறுவர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு தேவை என உணர 90 களில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாகின. கொலைகள் கடத்தல்கள் என்பன இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழத்திலிருந்து 90 களில் 174 பேரை அழைத்து சென்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மேலும் அன்றைய நிலையில் படையினர் முஸ்லிம் மக்களின் பெயர்களை கூறியே தமிழ் மக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் புலிகள் வளர்ச்சி பெற்றனர். 16 வயதில் நானும் புலிகள் அமைப்பில் இணைந்தேன். புலிகள் ஆயுத ரீதியில் சாதித்தனர். பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

பிரபாகரன் தவறிழைத்தார்

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது புலிகளுக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டன. ஏற்கனவே வட மாகாண கிழக்கு மாகாண பிரச்சினை இருந்தது. வட பகுதி அரசியல்வாதிகள் மேட்டுக்குடி ரீதியான தீர்மானங்களை எடுத்து தவறிழைத்ததைப்போன்றே பிரபாகரனும் தவறிழைத்தார். மேலும் உலக ஒழுங்குகளை புரிந்துகொள்ளவும் பிரபாகரன் தவறிவிட்டார். மீண்டும் யுத்தம் ஒன்றுக்கு தயாரானார். அத்துடன் அவரது பாணியிலேயே எம்மீதும் தாக்குதல் நடத்தினார். வெருகல் ஆற்றில் போர் இடம்பெற்றது. அத்துடன் மட்டக்களப்பில் புத்தி ஜீவிகளான கிங்ஸ்லி ராசநாயகம் ராஜன் சத்தியமூர்த்தி ஆகியோரை கொலை செய்தனர். அதனால் நாங்களும் ஆயும் ஏந்தினோம். பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றார். புலிகளுடன் பேச்சு நடத்த முயற்சித்தார். ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்தது. நாங்கள் அரசுடன் இணைந்தோம். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டது. அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. நாங்களும் அரசியல் கட்சியாக வந்து மாகாண சபை முறைமைக்குள் சென்றோம்.

தற்போது இந்த நல்லிணக்க ஆணைக்குழு திறம்பட விசாரணைகளை நடத்தி யோசனைகளை முன்வைக்கவேண்டும். அதிகாரப்பகிர்வு முறைமை யோசனைக்கு செல்லலாம். மேலும் மாகாண சபை முறைமை பலப்படுத்தப்படவேண்டும். அனைத்து மக்களும் நம்பிக்கைகொள்ளும் வகையில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்படவேண்டும். எனவே தற்போது கையில் உள்ள அதிகாரப்பகிர்வு முறைமை அமுலுக்கு வரவேண்டும். கடந்தகால அரசியல் தலைவர்கள் செய்த தவறு காரணமாக ஆயுத ஏந்திய தலைவர்கள் வந்தனர். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டன. எனவே மக்கள் உரிமைகளை உணரக்கூடிய வகையில் நாட்டை உருவாக்கவேண்டும். தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் உள்ளது.

கேள்வி: கிழக்கில் கடத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் எங்களிடம் முறைப்பாடுகள் வந்துள்ளன. அது தொடர்பில் ? பதில்: சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கூறினால் நான் விளக்கமளிக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள் அனைத்து மாகாணங்களிலும் இடம்பெறுகின்றன. எமது சட்டத்துக்குட்பட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை காணிப்பிரச்சினைகள் பல வகைகளில் உள்ளன. அதாவது பல்வேறு காலங்களில் பேர்மிட் ஆவணங்களுக்கு காணிகள் கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டன. எனினும் யுத்த காலத்தில் அவற்றை விட்டு மக்கள் வெளியேறியிருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு மாற்றுக்காணி வழங்கியிருந்தால் பழைய காணியை எவ்வாறு வழங்க முடியும்? உண்மையான உறுதி இருப்பின் காணிகளை வழங்கலாம். எனினும் இந்த பிரச்சினையை நான் இயன்றளவு தீர்த்து வருகின்றேன். சில இடங்களுக்கு நான் நேரில் சென்று பிரச்சினைகளை தீர்க்கின்றேன். எமது மாகாணத்தில் சமூக மட்டத்தில் முரண்பாடுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். முறைப்பாடுகள் கிடைப்பின் தீர்வுகளை நாங்கள் வழங்குவோம்.

சமூக ரீதியான பிரச்சினைக்கு விடமாட்டோம்

கேள்வி: யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்ட பட்டமை தொடர்பில் ?

பதில்: கிழக்கில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. யாழ்ப்பாண விடயங்களில் நான் தலையிட்டதில்லை. எனினும் கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு வேண்டுமானால் நான் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கலாம். மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எமது மாகாணத்தில் எந்தவகையிலும் சமூக ரீதியான பிரச்சினைகள் ஏற்பட விடமாட்டோம். காணி விடயத்தில் கவனமாக செயற்பட்டுவருகின்றோம்.

இதேவேளை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் மக்கள் இன்னும் முகாம்களில் உள்ளனர். சம்பூரில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இந்தியாவின் உதவியுடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடல் ஆழம் 17 மீற்றர்களாகும். ஆனால் சம்பூர் கடற் கரை பகுதியில் ஆழம் 23 மீற்றர்களாகும். எனவே பொருளாதார ரீதியில் முக்கியத்தும் பெறுகின்றது.

ஆனால் குறித்த ஆறாயிரம் மக்கள் தாங்கள் சம்பூர் பகுதியிலேயே குடியேறவேண்டும் என்று கூறுகின்றனர். எனினும் அவர்கள் விரும்புகின்ற வேறு இடத்தில் அதே பிரதேச செயலக பிரிவில் அவர்களை குடியமர்த்த நாம் தயாராக இருக்கின்றோம். இல்லை அவர்கள் அதே இடத்தில் குடியமர வேண்டும் என்றால் அது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிக்கவேண்டும்.

கேள்வி: கிழக்கில் அன்று 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: இது நல்ல கேள்வியாகும். கிழக்கில் 600 பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை விடயத்தில் நான் அந்த அமைப்பில் இருந்தவன் என்ற வகையில் மன்னிப்பு கோரலாம். ஆனால் 1990 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 11 ஆம் திகதி பொலிஸார் கொலை செய்யப்பட்டனர். நான் புலிகள் அமைப்பில் 1991 ஆம் ஆண்டு 2 மாதம் நான்காம் திகதியே இணைந்துகொண்டேன். எனவே இந்த விடயத்தில் நான் மன்னிப்பு கேட்பது பொருத்தமாக அமையுமா? இது விடயத்தில் அப்போது புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக இருந்த கருணாவை கேட்கலாம்.

இதேவேளை 90 களில் படையினர் மேற்கொண்ட விடயங்களையே என்னை புலிகள் அமைப்பில் இணைய வைத்தது. எரிக்கப்பட்ட சடலங்களை பார்த்துள்ளேன். 1990 களில் வெட்டுப்பாட்டி என்று ஒன்று இருந்தது. எனது வகுப்பு மாணவர்கள் மூவரை பிடித்துச் சென்றனர். பல பேர் காலில் விழுந்து கோரிய நிலையிலும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். எனவே அப்போதைய கால கட்டத்தில் அவ்வாறான சம்பவங்களை இயக்குவித்த அன்றைய அரசியல் வாதிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கருதுகின்றேன்.

Wednesday, October 20, 2010

வடபகுதி மக்களுக்கு முழுமையான அரசபணி வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை.

வெற்றி கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது சகலரினதும் தலையாய கடமையெனவும் அதனைக் காட்டிக் கொடுக்க இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவில் நேற்றுத் தெரிவித்தார்.
நாட்டில் ஒரு அரசாங்கமே உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 20 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்ட மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்க வேண்டுமெனவும் சேவை வழங்குவதில் இன, மத பேதங்கள், பாரபட்சங்கள் இருக்கக் கூடாதெனவும் வலியுறுத்திக் கூறினார்.
தம்மிடம்வரும் மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
வட மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, ரிசாட் பதியுதீன், குமார வெல்கம உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாண மக்களுக்கான சகல குறைபாடுகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளைப் பணித்துள்ளேன்.
இது விடயத்தில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தமது மக்களுக்கு சேவை செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் மக்களுக்கான சேவையை செய்வதற்காக கடமைப்பட்டுள்ர்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
வடக்கில் பாதை, பாடசாலை அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என சகல அடிப்படை வசதிகளையும் துரிதமாகப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அதற்கான பணிப்புரைகளையும் வழங்கினார்.
தாமதத்தினை தவிர்த்து சேவைகளை திருப்திகரமானதாக வழங்க சகலரும் அர்ப்பணிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tuesday, October 19, 2010

ஒரு மாணவனுக்கு மூன்று மொழிகளிலும் கல்வியை வழங்க வேண்டும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க.

ஜனாதிபதி முன்வைத்துள்ள புதிய கல்வி கொள்கையில் உள்ளார்ந்த கருத்து சிறு வயதிலிருந்தே மூன்று மொழிகளையும் ஒரு மாணவனுக்கு வழங்க வேண்டும் என்பதாகும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.
இன்று கண்டி வித்திலெவ்வை மகாவித்தியாலயத்தின் கணனி அறை, கணனித் தொகுதி என்பவற்றைத் திறந்த வைத்த பின் இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஏக்க நாயக்க, சிறு வயதிலிருந்தே மூன்று மொழிகளையும் ஒரு மாணவனுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இன்று கல்வி மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஆண் பாடசாலை, பெண்பாடசாலை, முஸ்லிம் பாடசாலை, தமிழ் பாடசாலை என்ற சகல பாகு பாடகளும் நீக்கப் பட்டு புதிதாக மூன்று வகைப் பாடசாலைகள் மட்டுமே ஏற்படுத்தப் படும்.
இதன்படி ஆரம்பப் பாடசாhலை, இடை நிலைப்பாடசாலை, உயர் பாடசாலை என்ற மூன்று பிரிவு மட்டுமே இருக்கும். அத்துடன் கணனிக் கல்வி முக்கியத்துவம் பெறும் . சகலமாணவர்களுக்கும் மடி கணனிகள் வழங்கப் படும். தேவையான அனைத்து வளங்களும் கணனியின் சேமிக்கப் பட்டடிருக்கும். இதன் காரணமாகவே இன்று கணனி அறிவிற்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது.
இதன்பிறகு இப்போதுள்ளது போன்ற ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினை மாணவர்கள் புத்தகம் சுமக்கும் பிரச்சினை, பாடத்திட்டம் மாற்றமடையும் போது அசிரியர்களுக்கு வழங்கவேண்டிய புத்தாக்க வகுப்புக்கள் போன்ற பல பிரச்சினைகள் குறைய இடமுண்டு என்றார்.
ஆரம்பப் பிரிவு முதலே சகல மாணவர்களுக்கும் மும்மொழிகளிலும் அடிப்படை அறிவு வழங்கவும் நடிவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

பொதுநலவாய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு வடக்கு, கிழக்குக்கு நாளை பயணம்.

கொழும்புக்கு நேற்று முன்தினம் வருகை தந்த பொதுநல வாய சங்கத்தின் பிரித்தானிய கிளையைச் சேர்ந்த பதினொரு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததுடன் இன்று (19 ம் திகதி) பிரதமர் டி. எம். ஜயரட்னவையும், சபா நாயகர் சமல் ராஜபக்ஷவையும் பாராளு மன்றத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதேவேளை இன்று பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யும் இக் குழுவினர் இளம் எம். பி. க்கள் குழுவையும், தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவையும் ஐ. தே. க. வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவையும் சந்தித்துக் கலந்துரையாடவி ருக்கின்றனர். இக் குழுவினர் நாளை (20 ஆம் திகதி) யாழ். குடா நாட்டுக்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
பொதுநலவாய சங்கத்தின் பிரித்தானிய கிளையிலிருந்து ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று பிரபுக்களையும் உள்ளடக்கிய பதினொரு பிரதிநிதிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஏழு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது.
இக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று மாலையில் சந்தித்து கலந்துரையாடி யதுடன் நேற்று நண்பகல் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவையும் சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவையும் பதில் வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவையும் சுகாதார அமைச்சு அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இக் குழுவினர் நாளை யாழ். குடா நாட்டுப் பாதுகாப்பு படை தலைமை யகத்திற்கு சென்று கலந்துரையாடல் களையும் நடாத்தவுள்ளனர்.
இவர்கள் புனரமைப்பு பணிகள் இடம்பெறும் கிராமங்களையும், கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட வுள்ளனர்.
இக்குழுவினர் யாழ்ப்பாண கச்சேரியில் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரை யாடவுள்ளதுடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும், யாழ்ப்பாண கோட்டைக்கும் செல்லவுள்ளனர். இக் குழுவினர் மறு நாள் 21 ஆம் திகதி திருமலையில் ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் ஆகியோரை சந்தித்துப் பேச வுள்ளனர்.
அத்தோடு மாவட்ட செய லாளருடனும், சமூகங்களின் பிரதிநிதி களுடனும், படைத் தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்துவதுடன் இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள பிரதேசங்களையும் பார்வையிடுவர் என்று உதவி பாராளுமன்ற மரபொழுங்கு களுக்கான அதிகாரி ஸஹ்ரான் இல்லியாஸ் கூறினார்.

Monday, October 18, 2010

போலிமருந்துகள் கடத்தலுக்கு விரைவில் தீர்வு சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை.

சட்டவிரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்றுக்காலை ‘போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றது.
அமெரிக்க அரசாங்கம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க மருந்தக சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை மருந்துகள் உற்பத்தி சங்கத்தின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகின் பிரதான வியாபார மோசடியை எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமானது ஆயுதக் கடத்தல். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மருந்துக் கடத்தல் ஆகும். இதனை நாட்டினுள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அதனை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இக்குழுக்களின் உறுப்பினர்களுள் பலர் நேர்மையான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்த போதிலும் சிலர் சட்டவிரோத மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் எமக்கு கையும் மெய்யுமாக கிடைத்துள்ளன. இச்செயற்பாடுகளுடன் அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்துக்கு பதில் கூறியே ஆகவேண்டும். சுகாதார அமைச்சரென்ற வகையில் தொடர்ந்தும் நாட்டில் போலி மருந்து மாபியா நடப்பதற்கு என்னால் இடம் வழங்க முடியாது. இதற்கெதிராக மிக விரைவில் நடவடிக்கையெடுப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Sunday, October 17, 2010

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான நடவடிக்கை நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல்கள் திணைக்களம்.

அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கென விண்ணப்பித்துள்ள கட்சிகளின் அடிப்படைத் தகைமைகள் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்துள்ள கட்சிகளின் முக்கியஸ்தர்கள் இதன்போது நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. அரசி யல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு தற்போது எண்பதற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Saturday, October 16, 2010

இறுதிக் கட்டத்தை எட்டும் உலகின் நீளமான சுரங்கப் பாதை.

உலகின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இறுதிக் கட்டத் தோண்டும் பணிகளில் இப்போது சுவிட்ஸர்லாந்து பொறியியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சுரங்க ரயில் பாதை 57 கிலோமீட்டர் நீளமானது.கோதார்ட் எனப்படும் இந்த சுரங்க ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் கடந்த 14 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2500 பேர் இதில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த இறுதிக் கட்டப்பணிகள் ஐரோப்பா முழுவதும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன.
இந்தச் சுரங்கப் பாதையூடாக ரயில் பயணம் 2017இல் தொடங்கப்படும் என்றும் இதன் மூலம் சூரிச்சுக்கும் மிலானுக்கும் இடையிலான பயணதூரமும் நேரமும் கணிசமாகக் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9.8பில்லியன் சுவிஸ் பிராங் அல்லது 6.4பில்லியன் ஸ்ரேலிங் பவுண் அல்லது 10.3 பில்லியன் டொலரில் நிர்மாணிக்கப்படும் இந்தச் சுரங்கப் பாதையூடாக தினசரி 300 ரயில்கள் மணிக்கு 250 கி.மீ.வேகத்தில் பயணம் செய்யவுள்ளன.

Thursday, October 14, 2010

கடற்தொழில் அமைச்சு வழிகாட்டலில் மட்டக்களப்பில் 120 மீனவர் அமைப்புக்கள்.

கடற்தொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 மீனவர் அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் இதனைத் தெரிவித்தார். இவற்றினூடாக எதிர்காலத்தில் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் கட்டியெழுப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை இம்மாவட்டத்தில் 60 அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒருமாத காலத்தில் ஏனைய 60 அமைப்புக்களின் பணிகளும் நிறைவடைந்து விடுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
120 அமைப்புக்களையும் உள்ளடக்கி மாவட்ட மட்டத்தில் ஒரு அமைப்பும், இவை அனைத்தையும் இணைந்து தேசிய ரீதியிலான சம்மேளனம் ஒன்றையும் ஏற்படுத்தவுள்ளனர்.
தேசிய சம்மேளனத்தின் முதலாவது தேசிய மாநாடு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இவ்வருட இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர்நாயகம் எஸ்.டபிள்யூ. பத்திரனவின் தலைமையிலேயே இந்த அமைப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 13, 2010

சிறைச்சாலையில் சரஸ்வதி பூஜை அமைச்சர் டியூ குணசேகர தலைமையில்.

புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தலைமையில் சிறைச்சாலையில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
மெகசின் சிறைச்சாலையிலேயே நேற்று இந்த விஷேட பூஜை நடைபெற்றது.
சரஸ்வதி பூஜையில் அமைச்சர் டியூ குணசேகரவூடன் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஷ்குமார் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்

Tuesday, October 12, 2010

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி!

புது டில்லியில் நாளை மறுதினம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்தியா செல்லும் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இரு தரப்புப் பேச்சுவாத்தையில் ஈடுபடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸஷம் செல்லவுள்ளார் இவர் இந்திய அமைச்சரவை உறுப்பினர்களுடன் இலங்கையின் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளார்.

மட்டக்களப்பில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

மட்டக்களப்பு மாவட்டதில் நாளை 13ஆம் திகதி புதன்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கென சுனாமி தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் டச்பார் கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் மாவட்ட பதில் இணைப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் தெரிவித்தார்.
நாளை மாலை 3.00 மணிக்கு குறித்த இடங்களை மையப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Monday, October 11, 2010

புனித ஹஜ் இலங்கையர் 5800 பேருக்கு இம்முறை சவூதி அரசு அனுமதி..

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 5800 பேருக்கு சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதென இஸ்லாமிய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். நபவி தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை ஹஜ் விவகாரக் குழ மேற்கொண்டு வருகிறது.
முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 10, 2010

கடலில் குழிக்கச் சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி..

மட்டக்களப்பு வெளிச்ச வீடு அமைந்துள்ளபகுதிக் கடலில் குழிக்கச்சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை ஜந்து இளைஞர்கள் இக்கடலில் குழிக்கச் சென்றுள்ளனர். இதில் இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நாவற்குடா பூநொச்சிமுனை கடற்கரை வீதியைச்சேர்ந்த சிங்கராசா ஜோபின்(19) மற்றும் நாவற்குடா கலாசார மண்டபத்திற்கு பின்பகுpதியில் வசித்துவரும் தெய்வேந்திரன் கிருஸ்னராஜ்(19) ஆகிய இரு இளைஞர்களுமே இதில் உயிரிழந்துள்ளனர். இதில் கிருஸ்ணராஜ் என்பவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜோபின் என்பரின் சடலம் இதுவரை கண்டெடுக் கப்படவில்லை. பொதுமக்களும் மீனவர்களும் அப்பகுதி கடற்படையினருடன் இணைந்து சடலத்தை தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு இளைஞர்களில் ஒருவர் மேசன் தொழில் ஈடுபடுவரெனவும் மற்றயவர் பெயிண்டிங் வேலை செய்வரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

26.09.2010 அன்று சுவிஸ் சூரிஸ்ச் மானிலத்தில் உதயம் அமைப்பினர் நாடாத்திய கலைகலாச்சார விழாவில் இடம் பெற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.........

சுனாமி அனர்த்ததினால் பாதிக்க பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தி முன்னேற்ற வாழ்வில் அவர்களை அழைத்துச்செல்ல காலம் தாழ்த்தாது அன்று பொதுநலசிந்தனைகளை சுமந்து சென்றபொது நலவாதிகளால் ஆராம்பிக்கப்பட்டது உதயம் என்ற பொது நல்அமைப்பு. புலம்பெயர் மக்களின் ஆதரவோடு தமிழ்மக்களின் கரம்பற்றி வருடாவருடம் கலைநிகழ்வுகளை நடாத்துவது மக்கள் அறிந்த விடையமாகும் இதே போன்று இவ்வருடமும் உதயம் அமைப்பினர் சுவிஸில் ZÜRICH மானிலத்தில் 26.09.2010 அன்று 11.00 மணியளவில் ஆரம்பித்து இரவு 9.00 மணிவரை இடம்பெற்றது இப்பாரம்பரிய கலைகலாச்சார நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது பின்னர் உதயத்தின் தலைவர் அவர்கள் வரவேற்பு உரையுடனும் பின்னர் ரஞ்சன் கரோக்கி இசையில் பத்திப்பாடலுடன் நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டது தொடர்ந்து நடனம். அதியுர் சிறந்த தம்பதியனர். சிறந்த பெற்றோர்களும் பிள்ளைகளும் என்றும் .இவ்வாறான சிறந்த நிகழ்வுகளையும் மக்கள் முன் அரங்கேற்றினர் அதன்பின்னர் மதிய உணவு வழங்கப்பட்டது தொடர்ந்து அதிஸ்டசாலியார்? என்ற அதிஸ்டலாபசீட்டும் உதயம் அமைப்பினரால் அதிஸ்டம் பார்க்கப்பட்டது முதலாம் பரிசுபிரான்ஸ் நாட்டைசேர்ந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கும் மிகுதி 2ம 3ம் பிரிசுகள் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்களும் பெற்றுக்கொண்டனர் பின்னர் உதயம் அமைப்பின் அங்கத்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது இவ் காலாச்சார நிகழ்வை பொரும் தொகையான மக்கள் காணவந்திருந்ததை நாம் காணக்கூடியதாகவிருந்தது பெரும்பாலான மக்கள் நிகழ்வுகளில் அர்வத்துடன் கலந்து கொண்டனர் இவ்நிகழ்வுகளில் சிறுவர்களின் நடனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது என உதயம் நிகழ்வை காண வந்த மக்கள் தெரிவித்திருந்தனர் பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வந்திருந்தனர் இறுதியின் மீன்மகள் பாடுகிறாள் வாவிமகள் ஆடுகிறாள் என்ற பாடலுக்கு அனைவரும் நடனமாடி உதயம் விழாவினை நிறைவு செய்தனர் இவ்விழாவினை பக்கபலமாக நின்று ஓழுங்கமைத்து சிறப்பாக நடாத்த தங்கள் கரங்களை தந்து உதவியவர்களுக்கு உதயம் அமைப்பினர் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்

மலையகத்தில் அடை மழை கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் மக்கள் இடம்பெயர்வு...

மலையகப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையால் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வாழ்ந்த சுமார் 14 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேரை அந்த வீடுகளை விட்டு வெளியேறுமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி பணித்துள்ளார்.
மேற்படி நடவடிக்கை நேற்று முன்தினம் (08) மாலை 4 மணி அளவில் இடம் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக சில தினங்களாக பெய்து வரும் அடைமழையால் இத்தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புகள் பாதிப்புக் குள்ளாகியுள்ளன. ஒரு சில வீடுகளில் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

Saturday, October 9, 2010

ஐந்து இலட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை மீளக்குடியமர்வு.

யுத்தம் காரணமாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களில் 5,44,494 பேர் இதுவரை மீள்குடி யேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுயதொழில், மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வதினூடாக தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க எம்.பி வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தற்பொழுது 1,65,755 பேர் முகாம்களில் உள்ளனர். மீள்குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபா உதவி வழங்கப்படுகிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் அப்பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் மக்கள் வங்கிக்கிளைகள் ஊடாக மீள வழங்கப்படும்.
வவுனியா மெனிக்பாம் முகாமில் மீள்குடியேற்றுவதற்காக 8228 குடும்பங் களைச் சேர்ந்த 24,280 பேர் எஞ்சியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 22,264 குடும்பங்களைச் சேர்ந்த 64,924 பேரும், அநுராதபுரத்தில் 4273 பேரும், குருநாகலில் 730 பேரும், பாணந்துறையில் 1405 பேரும், புத்தளத்தில் 67,428 பேரும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.

Friday, October 8, 2010

சர்வதேச மட்டத்தில் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதே ஐ.தே.கவின் நோக்கம் அமைச்சர் மைத்திரி.

சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின் மீது சேறு பூசவதையும், அபகீர்த்தியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுதான் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐ.தே.க.வினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டி ருக்கும் சகல குற்றச் சாட்டுக்களை யும் நாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் சபைக்குக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவை நியமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஜி.எஸ். பி. பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் கிடைப்பதற்கு வழி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தவறியுள்ளார்.
அதனால், அவர் அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதில் இச்சபை நம்பிக்கை இழந்துள்ளதெனக் குறிப்பிட்டு ஐ.தே.க. எம்.பிக்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இப்பிரேரணை மீதான விவாதத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி ஏற்று ஆறுமாதங்கள் கூட நிறைவுறவில்லை.
அதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர். இது நாட்டின் மீதுள்ள பற்றினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல. இது உள்நோக்கத்துடன் வெளிநாடுக்கு காண்பிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு பிரேரணையாகும்.
கல்வி அமைச்சருக்கு எதிராகவோ, சுகாதார அமைச்சருக்கு எதிராகவோ அல்லது வேறு அமைச்சர் ஒருவருக்கு எதிராகவோ நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கலாம்.
அதனை அவர்கள் செய்யவில்லை. ஏனென்றால் வெளி விவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றால் தான் சர்வதேச மட்டத்தில் அது பேசும் பொருளாக மாறும் அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் அற்ப இலாபம் பெற்றுக் கொள்ளலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இது தூர நோக்கற்ற முறையில் கொண்டு வரப்பட்டிருக்கும் பிரேரணையாகும்.
இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இப் பிரேரணை படுதோல்வி அடைவதுடன், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், அடைந்து கொள்ள, ஐ.தே.க. எதிர்பார்த்திருக்கும் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகிவிடும். ஐ.தே.க. மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கட்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடியைக் கூட தீர்த்துக் கொள்ள முடியாத நிலைக்கு ஐ.தே.க. தலைமைத்துவம் தள்ளப்பட்டிருக்கின்றது. ஐ.தே.க. வானது டி.எஸ்.
சேனநாயக்கா, டட்லி சேனாநாயக்கா போன்ற சிரேஷ்ட தலைவர்கள் தலைமை வகித்த கட்சி, அத்தலைவர்கள் தேசியத் துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டார்கள். அப்படியான நிலைமை இப்போது ஐ.தே.கவில் இல்லை.
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேக. அதற்கு ஆதரவு நல்கவில்லை. யுத்தத்தில் நாம் வெற்றி அடைவோம் என முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருக்கையில், இவர்கள் நாம் யுத்தத்தில் தோல்வியுற்று நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள வேண்டுமென விரும்பினர். அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேக.க. வினரும், புலி ஆதரவாளர்களும் வெளிநாடுகளுக்கு வழங்கிய பிழையான தகவல்கள் தான் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை நியமிக்க வழி செய்தது என்றாலும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்ஸின் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளால் அந்த நிபுணர் குழுவே காணாமல் போயுள்ளது என்றார்.

Thursday, October 7, 2010

செங்கலடியில் 145 பேர் இன்று காலை மீள்குடியமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவின் ஈரழக்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள லாவன்யா மற்றும் குருக்கனாமடு ஆகிய கிராமங்களில் இருந்து கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் இன்று மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
சித்தாண்டி பகுதியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த 145பேரே இவ்வாறு இன்று காலை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
செங்கலடி பிரதேச செயலகத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட உதவித்திட்ட பணிப்பாளர் ஏ.எல்.எம்.சரிப் மற்றும் செங்கலடி உதவி பிரதேச செயலாளர் சித்திரவேல், ஜக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள், எகெட் நிறுவன பிரதிநிதிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள் முன்னலையில் இவர்கள் அனுப்பப்பட்டனர்.
இரண்டு பஸ்களில் இவர்கள், அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாகயம் தெரிவித்தார்.

மழலை புன்னகைத்து கூறியது
மாமாவைபார்த்து தன்மாமாவைபார்த்து
மலந்த முகத்துடன் வானை காட்டி
மலர்ந்து விட்டது உதயம் என்று... நல் உதயம் ஒன்று

Wednesday, October 6, 2010

வர்த்தமானியில் உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்ட மூலம் அமைச்சருமான தினேஷ் அறிவிப்பு.

வர்த்தமானியில் உள்ளுர்ராட்சி மன்றங்கள் திருத்தச் சட்ட மூலம் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வர்த்தமானியில் உள்ளுர்ராட்சி மன்றங்கள் திருத்தச் சட்ட மூலம் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சி தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வர்த்தமானியில் வெளியிடப்படடுள்ள உள்ளுர்ராட்சி மன்றங்கள் திருத்த சட்ட மூலத்தின்; பிரதியை எதிர்க்கட்சித் தலைவர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Tuesday, October 5, 2010

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது அத்துமீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை; கிழக்கு அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் ஜனாதிபதி..

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடமளிக்க முடியாது. அத்துமீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்ற முயல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அத்தகையவர்களுக்குத் துணை போகக்கூடாது எனவும் அதிகாரிகளுக்குக் கடுமையாக உத்தரவு பிறப்பித்தார்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ஏ. எல்.எம். அதாவுல்லா, பி. தயாரத்ன, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ரி. ஹஸனலி, பர்சேகுதாவூத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராயவென குழுவொன்றை நியமிக்க விருப்பதாகவும் கூறினார். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் இது மூவின மக்கள் வாழும் மாகாணமாகும். தமிழ் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ அநீதி இழைக்கப் படமாட்டாது. சிறு சிறு பிரச்சினைகளை எவரும் இன ரீதியாகப் பார்க்கக்கூடாது.
கிழக்கு மாகாணம் பல வருடங்களுக்குப் பின் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. சகல பேதங்களையும் மறந்து, அரசியல் வாதிகள் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகலரும் பூரண பங்களிப்பை வழங்குவது அவசியம்.
மொழிப் பிரச்சினைகள் பெரும்பாலான பிரதேசங்களில் நிலவுகின்றன. அதற்குத் தீர்வு காணும் வகையில் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிங் கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக தமிழ் அதிகாரியையும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மேலதிகமாக சிங்கள அதிகாரியையும் நியமிக்கத் தீர் மானித்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதியை செலவிட்டு அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் காத்தான்குடியில் பறிமுதல்..

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மற்றும் மென்பானங்கள் என்பவற்றை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று கைப்பற்றினர்.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.ஜாபீரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான றஹ்மத்துல்லா மற்றும் பசீர், குலேந்திரகுமார் ஆகியோர் இவ்வர்த்தக நிலையத்தில் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது அங்கிருந்த பிஸ்கட் வகைகள், மாஜரின் வகைகள், மென்பானங்கள், கடலை வகைகள் உட்பட காலாவதியான மற்றும் பல பாவனைக்குதவாத உணவுப் பொருட்களைக் கண்டெடுத்து கைப்பற்றினர்.
அத்தோடு குறித்த வர்த்தக நிலையத்தையும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்து மூடினர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் காத்தான்குடி சுகாதார அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குறித்த வர்த்தகருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர் தெரிவித்தார்.