Tuesday, April 19, 2011

இலங்கைக்கான உதவியை இரட்டிப்பாக்க உலகவங்கி முடிவு அமைச்சர் சரத் அமுனுகமவிடம் உலக வங்கிப் பணிப்பாளர் உறுதி…..

இலங்கைக்கு வழங்கி வரும் உதவித் தொகையை அடுத்த வருடம் இரட்டிப்பாக்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஒக்கொன்ஜோ இவெலாவை வொஷிங்டனில் சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், உலக வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார ரீதியில் நாடு முன்னேறிச் செல்வதற்கான திட்டங்களுக்கு உலக வங்கி தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனக் குறிப்பிட்ட ஒக்கொன்ஜோ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தலா வருமானத்தை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டத்துக்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் தெரிவித்துள்ளார். நடுத்தர வருமானங்களைக் கொண்ட நாடுகளின் அபிவிருத்திக்கு உலக வங்கி உதவிவருகிறது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோன்று இலங்கைக்கும் உதவிகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார். இலங்கை பொருளாதார ரீதியில் துரித அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர், புனர்நிர்மாண மற்றும் அபிவிருத்திக்கான வங்கியிலிருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கான தகுதி யைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப் பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டியிருக்கும் உலக வங்கியின் முகா மைத்துவப் பணிப்பாளர் ஒக்கொன்ஜோ இவெலா, அபிவிருத்திகள் மற்றும் திறன் களை இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையே உலக வங்கி எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் கூறி யுள்ளார். சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகமவுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.டி.தீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.என்.வீரசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆந்திர பிரதேச கடற்பரப்பில் 10 இலங்கை மீனவர் கைது..

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்கள் 10 பேரையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள் ளது. இந்து சமுத்திர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் எல்லை மீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாகக் கூறி ஆந்திர பிரதேச கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயணித்த இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இக்கைது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரட்ண, இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தா னிகராலயத்துடன் பேச்சு நடத்தி, மீனவர் களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சி களில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் தினகரனுக்குத் தெரிவித்தார். இந்திய சட்டமுறைகளுக்கு அமைய இம்மீனவர்கள் விடுதலை செய்யப்படு வார்கள் என இந்திய அதிகாரிகள் அமைச்சருக்குப் பதிலளித்திருப்பதாகவும் எனினும், இம்மீனவர்களை கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டிருந்த நிலையில், தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் 10 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போன நான்கு மீன வர்களில் நான்காவது நபரின் சடலம் நாகப்பட்டிணம் பகுதியில் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. நான்கு மீனவர்களில் ஒருவரின் சடலம் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு சடலங்கள் தமிழகத்தின் தொண்டி பிரதேசத்தில் மீட்கப்பட்டதாகவும் அவ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Saturday, April 16, 2011

உலகின் ஆறாவது செல்வாக்குமிக்க தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு டைம் சஞ்சிகையின் வாக்கெடுப்பில் கணிப்பு.......



உலகிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரை உலகின் அதிக பிரபலம் பெற்று விளங்கும் டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்தமைவாளர்கள், மதத்தலைவர்கள், சான்றோர் மற்றும் நீங்கள் விரும்பும் வீரமிக்கவர் போன்றவர்கள் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் முன்னணியில் உள்ள நூறு பேரை தெரிவு செய்யும் பொறுப்பை டைம் சஞ்சிகை உலகெங்கிலும் பரந்திருக்கும் தனது இலட்சக் கணக்கான வாசகர்களிடம் விட்டிருந்தது. வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 88,069 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்திற்கு தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் துணைவியார் மிச்சல் ஒபாமா 16,460 வாக்குகளைப் பெற்று 30 இடத்திற்கும், உலகின் மிகவும் அதிகாரம் படைத்த மனிதன் என்று கூறப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை வகிக்கும் பராக் ஒபாமா 8,669 வாக்குகளைப் பெற்று 46வது இடத்திற்கும் வந்திருக்கிறார். இலங்கை ஜனாதிபதியைப் பற்றி சில சர்வதேச அமைப்புக்களும், அமெரிக் காவை ஆதரிக்கும் சில நிறுவனங்களும் போலிப் பிரச்சாரங்களை செய்து இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எத்தனித்துக் கொண்டிருக்கும் இவ்வேளை யில், சர்வசே புகழ்பெற்ற சஞ்சிகையின் கற்றறிந்த வாசகர்கள் அந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து இலங்கை ஜனாதிபதியின் சாதனைகளை மதிப்பீடு செய்து அவருக்கு இந்தளவு பெருந்தொகை வாக்குகளை வழங்கி ஆறாவது நிலைக்கு உயர்த்தியிருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விடயமாகும்.

Thursday, April 14, 2011

தம்மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது பிரதியமைச்சர் முரளிதரன்……..

தமது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தம் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். போராட்டத்தில் இருந்து ஆயுத வன்முறையினால் எதுவும் சாதிக்கமுடியாது என்பதையுணர்ந்து ஜனநாயக வழிக்கு திரும்பி அதன் மீது நம்பிக்கைகொண்டு அரசியலில் பிரவேசித்து இன்று இந்த நாட்டின் மாபெரும் அரசியல் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பிரதியமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளேன். இவ்வாறான நிலையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை எம்மை கடும் கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் எனது நற்பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை உண்டுபண்ணுபவையாகவும் உள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் எதுவித அசம்பாவிதங்களும் அற்ற நிலையில் மக்கள் மிகவும் ஒரு சந்தோஷமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அங்கு சென்றுவரும் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் விழிப்புடன் செயற்பட்டுவருகின்றேன். கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உத்தரவு விடுத்த நிலையில் இன்று அந்த மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் இன்றி நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். இவ்வாறான நிலையில் எதுவித ஆதாரமும் இன்றி இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரின் பெயருக்கு எதுவித ஆதாரமும் இன்றி களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நிறுத்தவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றேன். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் நாங்கள் எதுவித விமர்சனமும் செய்யாத நிலையில் எமது நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதையும் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிழக்குமகள் இணையத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

பிறக்கும் புதுவருடம் உலக
மக்கள் அணைவரும்
அமைதியும் சந்தோசத்துடனும்
இனிதே இன்புற்றிருக்க இனிய
வாழ்த்துக்கள் கிழக்குமகள்

Wednesday, April 13, 2011

தமிழ்-சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு ஊர்செல்ல கொழும்பில் பயணிகள் திரள் 3500 பஸ்கள் சேவையில்..

தமிழ்-சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு 3500 பயணிகள் பஸ்வண்டிகள் நேற்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இத்திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2500 பஸ்வண்டிகளும், 1000 தனியார் பஸ்வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்த ப்பட்டிருப்பதாகவும் அமைச்சுக் கூறியது. பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு மக்கள் செல்வதற்காக வெளி இடங்களி லிருந்து கூடுதலான பயணிகள் பஸ் வண்டிகள் கொழும்புக்குத் தருவிக்கப் பட்டிருப்பதாக இ.போ.ச. தெரிவித்தது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடங்களில் பெருமளவான மக்கள் நேற்று முண்டியடித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இருப்பினும் மக்கள் எவ்வித கஷ்டமுமின்றி சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. இதுஇவ்வாறிருக்க, பண்டிகை காலத்தையொட்டி இலங்கை புகையிரதத் திணைக்களம் நேற்று முதல் 17 ரயில்களை தூர இடங்களுக்கான மேலதிக சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. அவற்றின் பெட்டிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறுந்தூர ரயில் சேவையில் 70 புகையிரதங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இச்சேவை 14ஆம் திகதிவரை தொடரும் என்றும் ரயில்வே திணைக்களம் கூறியது. இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கொழு ம்பு புறக்கோட்டை ரயில் நிலையம் மற்றும் பிரதான பஸ் தரிப்பிடங்க ளுக்கு நேரில் சென்று பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கும் விசேட போக்குவரத்து ஏற் பாடுகளைக் கண்காணித்து, உரிய பணிப்புரைகளை வழங்கினார்.

Thursday, April 7, 2011

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு! .

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. கிளிநொச்சியில் விவசாய பீடத்துக்கு அருகில் இதனை ஆரம்பிப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மூதவையும் பேரவையும் முடிவு எடுத்துள்ளன. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளரினால் உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்ட செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது. அதற்கான விபர அறிக்கையை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்கு ஓரிரு வாரங்களில் சமர்ப்பிப்பதென முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தொடரும் உதயத்தின் உதவிப்பணி..............

கிழக்கில் ஏற்பட்ட பாரியவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் பணியினை சுவிஸ் உதயம் அமைப்பு ஆரம்பித்துள்ளது. இதன்படி அம்பாறை மாவட்டத்திற்கான உதவிவழங்கும் நிகழ்வு கடந்த 20ம் திகதி கல்முனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 103 மாணவர்களுக்கு தலா 5000 ரூபா வைப்பிலப்பட்ட சேமிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் இருதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாணவர்களில் ஒருவருக்கு 50,000 ரூபா பெறுமதியான இன்புஸா பம் வழங்கப் பட்டதுடன் மற்றைய மூவருக்கும் வைத்தியச்செலவுகளுக்கென தலா 50;000 ரூபா வைப்பிலிடப்பட்ட சேமிப்புப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதயத்தின் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.ஏப்ரல் 4ம் திகதி மட், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மற்றொரு நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 550 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது. அத்தோடு இப்பாடசாலையில் அமைக்கப்படவுள்ள கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கான செலவில் ஒருபகுதியை சுவிஸ் உதயம் அமைப்பு பொறுப்பேற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற பாரிய உதவிவழங்கும் நிகழ்வுகளில் ஒன்று எதிர்வரும் 8ம் திகதி மட் பெரியபோரதீவிலும் மற்றயது ஏப்ரல் நடுப்பகுதியில் திருகோணமலை மூதூர் தொகுதியிலும் இடம்பெறவுள்ளது.

Tuesday, April 5, 2011

மீள்குடியேறியோரின் வாழ்வாதார திட்டத்திற்கு ரூ. 1000 மில். ஒதுக்கீடு.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா பிரதேசங்களில் சுயதொழில் கடன்.



யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் கடன் வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ. சமரசிங்க தெரிவித்தார். வட மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 10,000 குடும்பங்களுக்கே சுய தொழில் முயற்சிகளுக்காக கடன் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர், வட மாகாணத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அரசாங்கம் இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இலகு கடன் வசதிகளை அறிமுகம் செய்வதன் மூலம் தமது வாழ்க்கையை பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும். மக்களுக்கு தேவையான சகல வசதி களையும் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வா தாரம் மட்டுமன்றி சமூக நல்லிணக்கத்தையும், சமாதான மான, நாட்டை கட்டியெழுப்ப முடியும். இதற்காகவே ஜனாதிபதி அவர்கள் மீள் குடி யேறிய மக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபை ஊடாக 4 வீத வருட வட்டியில் 10 வருட தவணைக் காலத்தில் செலுத்தி முடிக்கும் வகையில் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி யுள்ளது. இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஒரு வருடகாலம் சலுகைக் காலமும் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இக்கடன் தொகையானது ஆகக்கூடிய இரண்டரை இலட்சமும் குறைந்த பட்சம் 50,000 ரூபாவாகும். கடன்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் பிரதேசத்தில் காணப்படும் வளங் களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தி, சிறு வியாபாரம் தையல், விவசாயம் போன்ற உற்பத்திகளுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இவ் வேலைத்திட்டமானது 4 வருட கால எல்லையைக் கொண்டது. இக்காலப் பகுதியில் வடமாகாணத்திலுள்ள சகலரும் பொருளாதார நீதியாகவும், சமூக ரீதியாக வும் எழுச்சி பெற முடியும். இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இக்காலப்பகுதி வரை 150 க்கும் மேற்பட்டவர்கள் இச் சலுகையை பெற்றுக் கொண்டதுடன் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது. மிக விரைவில் அவர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Friday, April 1, 2011

புனர்வாழ்வு பெற்ற 206 பேர் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு.

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 206 பேர் இன்று (01,04,11) வவுனியா நகர மண்டபத்தில் நடைபெறும் வைபவத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள். சரண் அடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெறுகின்றதென அதிகாரிகள் தெரிவித்தனர்.