Thursday, September 24, 2009

அம்பாறையில் சிலர் இன்று சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பு.....

வுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து, அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களில் இன்றும் ஒரு சிறு தொகையினர் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் நேற்று முதலாவது நாள் விடுவிக்கப்பட்டனர். இன்று இரண்டாவது நாளாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் விடுவிக்கப்பட்டு, பிரதேச செயலக அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டனர். பின்னர், பொலிஸ் - இராணுவ பாதுகாப்புடன் அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை 10 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 29 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாவட்டத்தில் சிங்கள மகா வித்தியாலய முகாமில் 75 குடும்பங்களைக் கொண்ட 238 பேரும், குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமில் 45 குடும்பங்களைக் கொண்ட 127 பேரும் என 123 குடும்பங்களைக் கொண்ட 367 பேர் கடந்த 12ஆம் திகதி முதல் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் நேற்று குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டும் 5 குடும்பங்களைக் கொண்ட 15 பேர் இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment