Sunday, March 6, 2011

லிபியாவிலிருந்து இதுவரை 600 இலங்கையர் நாடு திரும்பினர் தகவல்களைப் பெற விமான நிலையத்தில் 24 மணி நேர கருமபீடம்.

லிபியாவிலிருந்து இதுவரை 600 இலங்கையர்கள் நாடு திரும்பியிருப்பதாக இலங்கை வேலைவாயப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
விசேட விமானங்கள் மூலம் இவர்கள் பகுதி பகுதியாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நான்கு கட்டங்களாக 242 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் 150 பேர் நேற்றைய தினம் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்.
லிபியாவிலுள்ள 1500 இலங்கையர்களை யும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவர விசேட விமானங்களை அனுப்புமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இத்தகைய விசேட விமானங்கள் சில ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பதுடன், இன்றைய தினமும் விமானமொன்று லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளதென கிங்ஸ்லி ரணவக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
லிபியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் குறித்த தகவல்களை வழங்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப்பிரிவில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட கருமபீடமொன்று 24 மணித்தியாலங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், லிபியாவில் உயிரிழந்த இலங்கையர் கலவரத்தின் காரணமாக இறக்கவில்லையென்றும், வேலைத்தளத்தில் ஏற்பட்ட விபத்தினாலேயே அவர் உயிரிழந்திருப்பதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment