Friday, February 18, 2011

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்வலி வடக்கில் பிரதேச செயலகம் அறிவிப்பு.

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற முன்வராதவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு மீள்குடியமர முன்வராத குடும்பங்கள் சாதாரண குடும்பங்களாகவே கணிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் குடும்பங்களை வலி வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இடங்களில் படிப்படியாகக் குடியமர்த்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
எனினும் மீள் குடியமர அனுமதிக்கப்பட்ட இடங்களில் குடியமர விருப்பமில்லாத சிலர், வாழ்ந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் அவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை மட்டும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்தபடியே நிவாரணப் பொருட்களை மட்டும் தவறாது பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செயற்படுகிறார்கள். ஏற்கனவே வலி வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். நிலக்கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் படிப்படியாக மக்களை மீளக் குடியமர அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் அப்பகுதிக்கு சென்று தமது வீடுகளை, காணிகளை துப்புரவு செய்வதற்கோ குடியமர்வதற்கோ ஆர்வம் காட்டாமல் தாம் வாழும் பகுதிகளில் இருந்துகொண்டே நிவாரணப் பொருட்களை மட்டும் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே பிரதேச செயலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோதும்,
அரசாங்கம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவ தற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில் மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டவேண்டும். இதனாலேயே இவ்வாறான நிர்வாக ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment