Friday, October 9, 2009

இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைவு

கடந்த போர்ச்சூழல் காரணமாகக் இடம்பெயர்ந்தோருக்கான வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில், இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளதாகப் பல்லைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவருக்கு யாழ். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனியான வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவருடன் இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
ஓருசில மாணவர்கள் தமது உறவினர்களது வீடுகளில் தங்கியிருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் அந்த வசதி அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் இன்னும் முகாம்களிலேயே இருக்கின்றார்கள். இந்த மாணவர்கள் மாத்திரமே இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே, இந்த மாணவர்களின் வருகையையடுத்து, புதியதோர் அனுபவத்தை நாங்கள் எதிர்நோக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கின்றது. சில மாணவர்கள் திருமணம் முடித்து கைக்குழந்தைகளுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏனைய மாணவர்களைப் போல விடுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அதற்குப் பல்கலைக்கழக நடைமுறைகள் அனுமதிக்கமாட்டாது. ஆகவே அவர்களுக்கு வெளியிடங்களில் இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. இந்தத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நிறுவனங்கள், சமய நிறுவனங்களிடம் விடுதி வசதிகளை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளோம். என்றார் துணைவேந்தர்

No comments:

Post a Comment