Wednesday, November 24, 2010

கிருமிநாசினியைச் சுவாசித்த மேலும் 60 மாணவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிப்பு.

நுவரெலியா ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களில் கிருமிநாசினியை சுவாசித்த மேலும் 60 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 19 பேர் இதே போன்று வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்று பாடசாலைக்குச் சென்ற மாணவர்களின் பலர் வகுப்பறை மண்டபத்திற்குச் சென்ற போது அந்த மாணவர்களுக்கு மயக்கமும் குமட்டலும் உதடுகளில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 60 பேர் உடனடியாக 10.30 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்; சென்று அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தப்பாடசாலையின் அருகிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் நேற்று முற்பகல் 11 மணியளவில் பயிர்களுக்குக் கிருமிநாசினி விசிறியுள்ளார்கள். இந்தக்கிருமி நாசினி காற்றுடன் கலந்து பாடசாலை சூழலில் பரவியதால் மூன்றாம் தவணைப்பரீட்சை எழுதிக்கொண்டிருந்த தரம் 10 மற்றும் தரம் 11 வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சுவாசித்துள்ளனர்.
இதன் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நான்கு மாணவிகளும் 15 மாணவர்களும் நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு தற்போது சிகிச்சைப்பெற்றுவருவதாக ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் தெரிவித்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை இந்தச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் மேலும் தெரிவித்தார். _

No comments:

Post a Comment