Tuesday, November 23, 2010

விடுதலை குறித்து நளினி மனு மன்றில் ஆஜராக தமிழக அரசுக்கு அறிவிப்பு.

இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நளினி, தனது விடுதலை கோரி தாக்கல் செய்திருக்கும் மீளாய்வு மனு தொடர்பாக மன்றில் ஆஜராக வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று அறிவித்தல் வழங்கி உள்ளது.
நளினி அவரது விடுதலையைக் கோரி முன்பு தாக்கல் செய்திருந்த மனுவை இதே நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி நிராகரித்தது.
அப்போது நீதிபதி தர்மராவ் தலைமையிலான நீதிபதிகள் குழு நளினியை ஏன் விடுவிக்கக் கூடாது என தமிழக அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் சுமார் ஆறு மாதங்களுக்கு பின் நளினி மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இம்மீளாய்வு மனு தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு முன் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
நளினியை ஆதரித்து சட்டத்தரணி பி.புகழேந்தியின் நெறிப்படுத்தலில் சட்டத்தரணி எம். இராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கு தொடர்பாக அடுத்த தவணைக்கு மன்றில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் குழு எதிர்மனுதாரரான தமிழ்நாடு அரசுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
அத்துடன் இம்மனு தொடர்பாக எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன் தமிழக அரசு எழுத்துமூல பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்நீதிமன்றம் கோரி உள்ளது.

No comments:

Post a Comment