Friday, January 22, 2010

தமிழ் அரசியல் கைதிகள் 200 பேர் அடுத்த வாரம் விடுதலை...

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 200 பேர் அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 பேரில் 17 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளதுடன் 13 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 13 பேர் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
200 பேரை அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் வவுனியா தெல்லிப்பழை வெலிக்கந்த ஆகிய இடங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 11 ஆயிரம் பேரில் 700 பேர் அண்மையில் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றங்கள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை தொடர்பாக ஆராயவென சட்டமா அதிபர் திணைக்களம் 10 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்குவது என்றாலும் கூட நன்கு ஆராய்ந்தே விடுதலைப் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். யுத்த காலப் பகுதிகளில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
இவ்விடயத்தில் அமைச்சு மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்த பின்னரும் கூட வெறுமனே தடுத்து வைத்திருப்பதில் பலனில்லை. எவ்விதத்திலேயேனும் அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சரணடைந்தவர்கள் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை வெறுமனே வெளியில் விடாமல் அவர்களது பெற்றோருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்கவும் சுயதொழில் செய்வதற்கு தேவையான உதவிகளையும் பெற்றோரிடம் கலந்தா லோசித்து பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
எனவே இவ்விடயத்தில் எவரும் அரசியல் இலாபம் தேடக்கூடாது. அரசாங்கமும் அமைச்சும் இளைஞர்களின் விடுதலை தொடர்பான தேவையான சகல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment