Monday, January 25, 2010

தேர்தல் கண்காணிப்பில் 35,000 வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள் 1000 வாகனங்கள் பணியில்..

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் பொது நலவாய மற்றும் தெற்காசிய பிராந்தியம் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 85 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் தேர்தல் திணைக்களம் மற்றும் தனியார் கணிகாணிப்பு அமைப்புக்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் கணிகணிப்புக்கான வலையமைப்பு, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் ,தேசிய வாக்களிப்பு கண்காணிப்பு நிலையம், பெப்ரல், கபே உள்ளிட்ட சில தனியார் தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தேர்தல் ஆணையாளர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தெற்காசிய பிராந்தியத்திலிருந்து 40 பேரையும் பொது நலவாயத்திலிருந்து 10 பேரையும் இலங்கைக்கு வரவழைத்திருப்பதாகவும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறினார்.
இதேவேளை, பெப்ரல் அமைப்பு 17 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் சி. எம். இ. வி. 18 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் வரவழைத்திருப்பதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, சுவீடன், கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே இலங்கை வந்துள்ளனர்.
வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் நடமாடும் கண்காணிப்பினை நடத்துவதற்காக சுமார் ஆயிரம் வாகனங்களை மேற்படி தனியார் கண்காணிப்பு நிலையங்கள் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்கென விசேடமாக உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெப்ரல் அமைப்பு ஆறாயிரம் உள்நாட்டு மற்றும் 17 வெளிநாட்டவர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தவிருப்பதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஆசிய நாடுகளிலிருந்தும் ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, சுவீடன் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 17 பேரும் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, பெப்ரல் அமைப்பினால் 352 வாகனங்கள் இம்முறை நடமாடும் சேவைக்கு ஈடுபடுத்தப்படுமெனவும் ரோஹண கூறினார்.
சி. எம். ஈ. வி. – நிலையம் 3500 உள்நாட்டவர்களையும் 18 வெளிநாட்டவர்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ள அதே நேரம், 80 வாகனங்களை நடமாடும் சேவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஆசிய நாடுகளிலிருந்தும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து 18 பேரை சி. எம். ஈ. வி. வரவழைத்துள்ளது. இதில் நேபாளத்திலிருந்தே ஆகக் கூடுதலாக 10 கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, புத்தளம், அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனரெனவும் அவர் கூறினார்.
ஐ. எப். எச். ஆர் நிலையம் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 872 பேரை இம்முறை கண்காணிப்பில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் 08 வாகனங்கள் நடமாடும் சேவையினை மேற்கொள்வதாகவும் அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 563 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 300 வாகனங்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக அதன் பேச்சாளர் கி. பி. தென்னகோன் கூறினார்.
தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் இம்முறை 1200 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 150 வாகனங்களையும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment