Thursday, January 13, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 வீத மக்கள் பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் 85 சதவீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க உதவி அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.
14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 185 நலன்புரி முகாம் இயங்குகின்றன. 28376 குடும்பங்களைச் சேர்ந்த 105, 747 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் 28 முகாம்கள் உள்ளன.
20189 குடும்பங்களைச் சேர்ந்த 59193 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் 4272 குடும்பங்களைச் சேர்ந்த 14687 பேர் இடம்பெயர்ந்து 9 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பனிச்சங்கேணி பாலம் பாதிக்கப்பட்டுள்ளதனால் கதிரவெளி, புளிச்சாக்கேணி, பாற்சேனை, அம்பந்தனாவெளி, ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, தோணிதாட்ட மடு, மருதன்கேணிக் குளம், ஓமடியாமடு, வாகரை வடக்கு மற்றும் மத்தி ஆகிய பிரதேசங்களுக்கான தரைவழிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு 4055 குடும்பங்களைச் சேர்ந்த 14520 பேர் நிர்க்கதியாகியுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ராகுல நாயகி தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் ஹெலிகொப்டர் மூலமான உணவு விநியோகம் தாமதமடைகிறது.
உழவு இயந்திரங்கள் மூலம் மக்கள் வெளியேற்றம்
ஏறாவூர் பிரதேசத்தில் மிக மோச மாகப் பாதிக்கப்பட்ட மக்களை ஏறாவூரில் உள்ள பொது அமைப்பு க்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் முன்வந்து உழவு இயந்திரங்க ளின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலைகளிலிருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு வகைகளை ஏறாவூரில் உள்ள பொது அமைப்புக்கள் வழங்கி வருகின்றன.
வெற்றிலைத் தோட்டங்கள் நாசம்
களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி, எருவில் ஆகிய கிராமங்களில் வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தமது தொழிலை இழந்துள்ளன.
சந்தையில் வெற்றிலைக்கான தட்டுப்பாடு நிலவுவதுடன், வெற்றிலையின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அரிசி ஆலைகள் வெள்ளத்தில்
கல்குடா தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, மாஞ்சோலை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, தியாவட்டவான், மைலங்கரச்சை, கிண்ணையடி கறுவாக்கேணி, சுங்கான்கேணி, கிரான், புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதிகள் மற்றும் குடிமனைகளனைத்தும் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அமீர்அலி விளையாட்டரங்கு - மைதானம் என்பனவும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இராணுவத்தினர் பொலிஸார் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை நல்கினர்.
தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து
மக்கள் மத்தியில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள் ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீரின் மூலமாகவே தொற்று நோய்கள் பரவக்கூடிய சூழ்நிலை அதிகம் காணப்படுவதால் மக்கள் கொதித்தாறிய நீர் மற்றும் போத் தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பவற்றைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன்புரி நிலையங்களில் மிக நெருக்கமாக தங்கவைக்கப் பட்டுள்ளதால் நோய்கள் பரவும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
1957ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட பெருவெள்ளம்
1957ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென வயோதிபர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமத்துக்கு கிராமம் போக்குவரத்துக்குள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார, மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் 4 வைத்திய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குழுக்களில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் கள் அடங்குகின்றனர்.
வான்கதவுகள் திறக்கப்பட்டதால் கிராமங்கள் வெள்ளத்தில்
திருகோணமலை மாவட்டத்தில் அடைமழையினாலும் மற்றும் கந்தளாய் குளம், ஏனைய சிறு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாலும் கிண்ணியா பிரதேசத்தில் பல வீதிகள், மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ்ந்த பகுதிகளிலுள்ள மக்களை வள்ளங்கள் மூலம் பல பொது அமைப்புக்கள் மேட்டு நிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருகின்றன.
கிண்ணியா பிரதேச செலயகப் பிரிவில் சமாவச்சதீவு, பூருவரசந்தீவு, ஈச்சந்தீவு, கிரான், மஜீத் நகர், வட்டமடு, மணியரசங்குளம், குட்டித்தீவு, முனைச்சேனை, காக்காமுனை, நெடுந்தீவு, பட்டியனூர், மகமார், நடுஊற்று, ஆயிலியடி போன்ற பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சமாவச்சதீவு, பூவரசந்தீவு, சூரங்கல், ஆயிலியடி, தம்பலகமம், வான்எல, சல்லிக்களப்பு போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்வயல்கள் அழிவு
திருகோணமலை மாவட்டத்தில் பன்னிரெண்டாயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் அழிந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ. உகநாதன் தெரிவித்தார்.
குடலைப் பருவமான இறுதிக்கட்டத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் அழிந்துள்ளன.
சேனைப்பயிர்கள், மேட்டு நிலப்பயிர்கள், உப உணவுப்பயிர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் இருப்பிடங்களை விட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று தினங்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குமாறு திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் டி. ஆர். சில்வா பணிப்புரை வழங்கியுள்ளார்.
மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்கியுள்ள மக்களை பார்வையிடும் பொருட்டும், தேவையான அத்தியாவசிய விடயங்கள் குறித்தும் மூதூர் பிரதேச செயலகத்தில் நடத்திய முக்கிய கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு பிரதேச செயலாளர் என் செல்வநாயகம், உதவி பிரதேச செயலாளர் எம். எச். முஹம்மட்கனி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அபுல் பைதா ராசீக் பரீட் மற்றும் அதிகாரிகள் பங்குகொண்டனர்.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் நடவடிக்கையில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமமுன்னேற்ற சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான டெண்ட் படங்குகள் இருந்தவைகளை வழங்கியுள்ளதாகவும் மேலதிக தேவையானவைகளை அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிடம் வேண்டியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் செல்வநாயகம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment