Friday, January 14, 2011

கிழக்கு மாகாணத்தில் அடைமழை ஓய்வு.

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வந்த அடைமழை ஓய்ந்துள்ளதுடன் நேற்று பல நாட்களுக்குப் பின்னர் சூரிய ஒளி தென்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை காலநிலை சீரடைந்து காணப்பட்டது. இதனால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இயல்புநிலை ஓரளவுக்கு வழமைக்கு திரும்பியிருந்தது.
இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இந்த மக்களுக்கு சமைத்த மற்றும் உலர் உணவுகள் நேற்றும் வழங்கப்பட்டன. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவினர்கள், மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்தோரில் பெரும்பாலானவர்கள் நேற்று தமது வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காலநிலை நேற்று சீரடைந்ததை அடுத்து மட்டக்களப்பு மன்னம்பிட்டி பிரதான வீதிப் போக்குவரத்து உட்பட பெரும்பாலான வீதிப் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த விமான மற்றும் ஹெலிகொப்டர் சேவையும் வழமைக்கு திரும்பியதோடு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

No comments:

Post a Comment