Thursday, January 27, 2011

பத்துத் தினங்களுக்குப் பின் மட்டு, அம்பாறையில் மீண்டும் மழை மக்கள் அச்சம்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும், நேற்றிரவு முதல் பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் மழை பெய்ய ஆரம்பித்ததனால், காலை வேளையில், பெருந்தோகை யான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை. கல்முனை கல்வி வலயத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது. என்றார்.

இடி மின்னலுடன் மழை


அம்பாறை மாவட்டத்தில் நேற்று பெய்த கனத்த மழையுடன் பலத்த காற்றும் இடி முழக்கமும் தொடர்ந்ததனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலையினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஓரளவுக்கு கடந்த ஒரு சில தினங்களாக வழமைக்கு திரும்பிய மக்களின் இயல்பு நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது.
தாழ் நிலங்களில் வெள்ளம்
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மழை காரணமாக அலுவலகங்களுக்குச் செல்லும் அரச, தனியார் உத்தியோகத்தர்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இம்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச வேளாண்மைகளை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாரான போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இம்மழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் ஏற்படுவதோடு விவசாயச் செய்கைகள் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படுமென விவசாயிகள் அச்சமடைந்து ள்ளனர்.

மட்டு மாவட்டம்



மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இற்றைவரை கடும் காற்றுடனான பெருமழை பெய்து வருவதால். மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும், பீதியும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
தொடராக மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் தமது உடைமைகளையும், வீடுகளையும் விட்டு 175க்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தங்கியிருந்து பல்வேறு அவலங்களையும், அசெளகரியங்களையும சந்தித்து கடந்த வாரமே தமது இல்லங்களுக்கு சென்று துப்புரவு செய்து மீள் குடியேறிய நிலையில், மீண்டும் மழை பெய்வதானது ஒருவிதமான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
கடும் காற்று பலமாக வீசும் என வழிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளதால், அச்சமான நிலைமையே காணப்படுகின்றது. மட்டு மாவட்டத்தில் பரவலாக காற்றுடனான மழை பெய்வதால் தண்ணீர் வற்றிய இடங்களில் எல்லாம் நீர் தேங்கி நிற்கின்றது. இந்நிலைமை காரணமாக மக்கள் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு



அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (26) பெய்த இரண்டரை மணித்தியால பெருமழை காரணமாகப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன். அரச மற்றும் பொது நிறுவனங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.
நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பல பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டது. கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதி மற்றும் அதற்கு அண்மித்த பிரதான வீதிகளின் வடிகான்கள் நிரம்பியமையினால் அக்கரைப்பற்று- கல்முனை வீதியில் திடீர் நீர்ப்பரவல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள கடைத் தொகுதிகளை அண்மித்த பகுதிகளிலும் இந்நிலை காணப்பட்டது.
மாவடிப்பள்ளி, சம்மாந்துறைப் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தமையினால், அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட சில பாடசாலைகளில் மாணவர்கள் ஒருசிலரே பாடசாலைக்குச் சமுகமளித்திருந்தனர். ஆசிரியர்களின் வரவிலும் மந்தகதி காணப்பட்டது.
காலை 6 மணி முதல் 8.45 வரை இப்பெருமழை நீடித்தமையினால் பிரதேச செயலகங்கள், பொது நிறுவனங்கள், வங்கிகள் முதலியவற்றின்
அன்றாட நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வாரங்களாகப் பெய்த அடைமழையினால் நில நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதனால் இவ்வாறானதொரு பெருமழை நீடிக்கும் பட்சத்தில் மீண்டுமொரு பெருவெள்ளம் ஏற்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

No comments:

Post a Comment