Monday, January 17, 2011

இந்தியாவிலிருந்து மேலும் இரு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா.

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக் கவென இந்தியாவில் இருந்து மேலும் இரண்டு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

முதலாவது தொகுதி நிவாரணப் பொருள்கள் அண்மையில் விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதுடன் இரண்டாவது தொகுதி நிவாரணம் இரண்டு கப்பல்கள் மூலம் அனுப்பிவை க்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நேற்று முன்தினம் மட்டக்களப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

விமானத்தில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருள்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது இந்திய உயர்ஸ்தானிகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக் கான புதிய பாடத்திட்ட நூல்களையும் பாடசாலை சீருடைகளையும் உடனே மீண்டும் விநியோகிக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஆராய்ந்து தீர்ப்பொன்றைத் தருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நிலைமைகளை ஆராய்ந்தனர். அப்போது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்று அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

பிரதான வீதிகள் தவிர்ந்த உள் வீதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வீதிகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதாக அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

அதேநேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காப்புறுதி செய்யப்படாத அனைத்து விவசாய நிலங்களுக்கும் நட்டஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

No comments:

Post a Comment