Friday, December 18, 2009

ஏ-9 வீதியூடாக இன்று முதல் சகல வாகனங்களும் பயணிக்கலாம் யாழ். அரச அதிபர்

ஏ-9 வீதியினூடாக இன்று முதல் தனியார் மற்றும் சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றிப் பயணிக்க முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி தனக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், "யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதையில் இன்று 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றிப் பயணிக்க முடியும். காலை 6.00 மணி முதல் மாலை 4.00மணி வரை இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்குமிடையிலும் இந்த அடிப்படையில் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் சகல பஸ்களும் யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து தொடரணி இல்லாமல் ஏ-9 வீதியினூடாக பயணிக்க முடியும். தேவைக்கேற்ப இடையிடையே இராணுவச் சோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரும் வரை நடைமுறையில் உள்ளவாறே நாவற்குழி களஞ்சியத்திலிருந்து தொடரணி மூலம் பயணிக்கலாம்.பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகனங்களும், சாரதி, நடத்துனர்கள், பயணிகள் யாவரும் இச்செயற்பாட்டில் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment