Wednesday, December 16, 2009

வெல்லாவெளியில் வெள்ளம் மக்கள் மீட்புப் பணியில் செஞ்சிலுவைச் சங்கம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் வெள்ளத்தினால் சூழப்பட்ட ஊற்றுமடு கிராமத்து மக்களை, இலங்கை செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் மீட்டு வந்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். படகுகள் மூலம் அழைத்து வரப்பட்ட 75 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, பாராமரிக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஆராயும் பொருட்டு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடை பெற்றது.இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இடம் பெயர்ந்துள்ள குடும்பங்களுக்குச் சமைத்த உணவு வழங்குவதற்கும், பாதிப்புக்கு உள்ளான ஏனைய குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்குமான பணிப்புரையை அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி இக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விடுத்தார். வெள்ளத்தினால் சூழவுள்ள கிராமங்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்ட அவர், அதற்கான செலவுகளை தனது அமைச்சு வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இக்கூட்டம் முடிந்த பின்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில இடங்களையும் அமைச்சர் சென்று பார்வையிட்டார். அதேவேளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.விமலராஜ் வெள்ளம் காரணமாக 58 ஆயிரத்து 897 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். நேற்று மாலை வரை பிரதேச செயலாளர்களிடமிருந்து கிடைத்தத் தகவல்களின் படி 350 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.வெள்ளம் தற்போது வடிந்து வருகின்றது. வீதிகளில் வெள்ள நீர் காணப்படுவதால் போக்குவரத்து சேவைகளும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இடி மின்னலுக்கு இலக்காகி 4 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி பட்டிப்பளை பிரதேசத்தில் மட்டும் 61 வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த ஒருவார கால மழை வெள்ளம் காரணமாக அந்தப் பிரதேசத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment