Wednesday, December 2, 2009

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு வெளியில் சென்று வர அனுமதி

அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்ததற்கு அமைய வவுனியா மனிக்பாம் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு வெளியில் சென்று வருவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அனுமதி வழங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கானவர்கள் மனிக்பாம் முகாம் தொகுதியில் இருந்து வெளியில் தனியாகவும் குடும்பமாகவும் வெளியில் வந்து பல இடங்களுக்கும் சென்றார்கள்.

ஒரு நாள் தொடக்கம் 15 நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டுத் திரும்பி வருவதற்கு முகாம்களில் உள்ள அதிகாரிகள் தமக்கு அனுமதி வழங்கியிருப்பதாக முகாம்களில் இருந்து வெளியில் வந்த பலரும் தெரிவித்தனர்.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை என்று நாட்டின் பல இடங்களுக்கும் செல்வதற்காகத் தாங்கள் முகாம்களில் இருந்து வெளியில் வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முகாம்களில் தடுத்து வைத்திருந்த தங்களுக்கு வெளியில் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாகவும் அவர்களில் பலர் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் செட்டிகுளம் மனிக்பாம் முகாம்களில் இருந்து வெளியில் வந்ததனால், செட்டிகுளத்திற்கும் வவுனியாவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள பேரூந்து வண்டிகள் மக்களின் பிரயாணத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாமல் திணற நேரிட்டதாக பேரூந்து சாரதிகள் தெரிவித்தனர்.

எனினும், ஒரு முகாமில் இருந்து மற்ற முகாமுக்குச் சென்றவர்களுக்கு அங்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment