Saturday, December 12, 2009

திருக்கோவில் கல்வி வலயத்திற்கு தனி வலயமாக. அனுமதி இனிய பாரதிக்கு கௌரவிப்பு

நீண்ட காலமாக திருக்கோவில் கல்வி வலயத்தை தனி வலயமாக அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியினை அடுத்து இன்று முதல் திருக்கோவில் கல்வி வலயம் தனிக் கல்வி வலயமாக செயற்படுவதற்கு ஜனாதிபதியினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4 மணியளவில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று திருக்கோவில் கல்வி வலயப் புத்திஜீவிகளால் நடத்தப்பட்டது.இந்நிகழ்வு ஆசிரியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் கதாநாயகன் இனியபாரதி அவர்களை பேண்ட வாத்தியங்கள் முழங்க மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டார். இந்திகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சின் மக்கள் தொடர்பாளர் திரு. நந்தகுமார் அவர்களும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருக்கோவில் கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்கள், 300இற்கு மேற்பட்ட் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நீண்ட காலமாக இக்கல்வி வலயத்தினை அமைப்பதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் பலவழிகளிலும் முட்டுக்கட்டைகளை போட்டுவந்துள்ள நிலையில் இன்று இக்கல்வி வலயம் அமையப்பெறுவது எமக்கு பெரிய வரப்பிரசாதமாகும் என புத்தஜீவிகள் கருத்துத் தெரிவித்தனர்.இதுவரையும் அக்கரைப்பற்று வலயத்தினுள் இயங்கிவந்துள்ள ஆலயடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் கோட்ட தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இவ்வலயத்தில் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment