Saturday, December 26, 2009

அமெரிக்க விமானத்தை தகர்க்க நைஜீரிய பயணி முயற்சி

அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளன.நைஜீரியாவைச் சேர்ந்த அப்துல் முதல்லாத் (வயது 23) என்பவர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து டெட்ராய்ட் நகருக்கு வடக்கு மேற்கு ஏயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். அப்போது விமானத்தில் ஒரு சாதனத்தை வெடிக்க வைக்க அவர் முயற்சித்துள்ளார்.சக பயணிகள் மற்றும் விமானத்திற்குள் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து அவரது முயற்சியைத் தடுத்து விட்டனர். அப்துல்லுக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.வெள்ளிக்கிழமை அந்த விமானம் டெட்ராய்ட்டில் தரையிறங்கவிருந்த சமயத்தில், தான் வைத்திருந்த அந்த சாதனத்தை வெடிக்க வைக்க அந்த நைஜீரியர் முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தீயால் புகை வாசம் வந்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த பயணிகள் அப்துல்லை மடக்கிப் பிடித்தனர். மேலும் தீயை அணைக்கவும் முயற்சித்தனர்.இந்த அமளியைப் பார்த்து பிற பயணிகளும் ஓடி வந்து அப்துல்லை தடுத்துப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த முயற்சியின்போது அப்துல்லுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த மேலும் 2 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விமானத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக தரையிறங்கியது.கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment